முல்லைத்தீவு மாணவி உயிரிழப்பு பொலிசாரின் அசமந்தப்போக்கே காரணம் – ரவிகரன் எம்.பி கண்டனம்

5 / 100 SEO Score

முல்லைத்தீவு – கொக்கிளாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணிப் பகுதியில், 21.05.2025இன்று பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த விபத்து இடம்பெறுவதற்கு கொக்கிளாய் பொலிசாரின் அசமந்தபோக்கே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாகச் சாடியுள்ளதுடன், உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

WhatsApp Image 2025 05 21 at 11.51.16 AM

குறிப்பாக வீதிப்போக்குவரத்துப் பொலிசார் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும்நேரத்தில் உரியநேரத்திற்கு கடமைக்கு வராமை மற்றும், அதிவேகத்துடன் செல்லும் வாகனங்களின் வேகக்கட்டுப்பாடுகுறித்து கொக்கிளாய் பொலிசார் கவனம் செலுத்தாமையே இந்த விபத்து இடம்பெற காரணமாக அமைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு கொக்கிளாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் சிலவருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்த விடயத்தையும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணிப் பகுதியில், பாடசாலைக்கு அண்மையில் 21.05.2025இன்று இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் -03இல் கல்விகற்கும் மாதீஸ்வரன் நர்மதா என்றமாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீதியில் மிகவேகமாக வந்த தென்னிலங்கைப் பகுதியைச் சேர்ந்த மீன்ஏற்றும் வாகனம் சிறுமிமீது மோதியதியுள்ளதுடன், சிறுமி 20தொடகம் 30 அடிவரையான தூரத்திற்கு வாகனத்தால் அடித்துச்செல்லப்பட்ட பிற்பாடே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

பாடசாலைக்காக மாணவர்கள் செல்கின்ற காலை வேளையில் இந்தச் சம்பவம் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்தப் பகுதியில் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் எவரும் குறித்த நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை.

கொக்கிளாய் மற்றும், கருநாட்டுக்கேணிப் பகுதியிலிருந்து மீன் ஏற்றிச்செல்கின்ற வாகனங்கள் எப்போதும் வேகக் கட்டுப்பாடின்றி மிக வேகமாகச் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்கிளாய் பொலிசார் இதேதொடர்பில் இதுதொடர்பில் நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதில்லை எனவும் மக்கள் முறையிடுகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவும் இவ்வாறு மீன் ஏற்றிச்செல்கின்ற தென்னிலங்கைப் பகுதியைச்சேர்ந்த வாகனமொன்று கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு அண்மையில் மாணவன் ஒருவன்மீது மோதியதில் குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியிருந்தது.

அத்தோடு பாடசாலை தொடங்கும் நேரம், பாடசாலையிலிருந்து மாணவர்கள் வீடுசெல்லும் நேரங்களில் வீதிப் போக்குவரத்து பொலிசார் உரிய நேரத்திற்கு கடமைக்கு வருவதில்லை எனவும் அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறாக தொடர்ச்சியாக கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறான விபத்துச்சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.

அதிலும் குறிப்பாக்பாடசாலைக்கு அண்மித்த பகுதிகளில், பாடசாலைக்கு மாணவர்கள் செல்கின்ற நேரத்தில் இவ்வாறான விபத்துச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இப்பகுதிப் பொலிசாரின் அசமந்தப்போக்காலேயே இவ்வாறு தொடர்ச்சியாக மாணவர்கள் உயிரிழக்கின்ற நிலை ஏற்படுகின்றது.

இந்த விடயத்தில் கொக்கிளாய் பொலிஸார்மீது அப்பகுதிமக்கள் மிகுந்த அதிர்ப்தியில் இருக்கின்றனர். பொலிசார் கையூட்டுக்களைப் பெற்றுக்கொண்டே இவ்விதமாக அசமந்தப் போக்குடன் செயற்படுகின்றார்களெனவும் மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.

இவ்வாறு இடம்பெற்றுள்ள இந்த விபத்திற்கும், மாணவியின் உயிரிழப்பிற்கும் பொலிசாரே முழுப்பொறுப்பாகும். உரிய நேரத்தில் கடமையில் ஈடுபடாமையாலும், வேகக்கட்டுப்பாடின்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அசமந்தப்போக்கோடு செயற்பட்டமையாலுமே இந்த விபத்தும், மாணவியுடைய உயிரிழப்பும் இடம்பெற்றுள்ளது.

இந்தவிடயங்களில் கொக்கிளாய் பொலிசார் முறையாக செயற்படவேண்டும்.  விபத்தில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொகள்கிறேன்.

இந்த விடயத்தில் பொலிசாரின் அசமந்தப்போக்கான செயற்பாடுதொடர்பிலும், உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்கவும் உரியதரப்பினரின் கவனத்திற்குகொண்டுசெல்வேன் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *