இதுவரை எவராலும் பேசப்படாத மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர்களின் வரலாறுகள் ஒவ்வொரு மனிதர்களும் அவசியம் அறிந்திருக்க வேண்டி வழித்தடங்கள் மலையக் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையை தூண்களாக இருந்து உருவாக்கியவர்கள் அவர்களது வலிகளையும் வரலாறுகளையும் ஆவணப்படுத்துவது நம் ஒவ்வொருவரினதும் கடமை
மனித படைப்பியக்கத்தில் ஒரு மனிதனுக்கோ அல்லது அவனது சமூகத்திற்கோ வரலாறு என்பது மிகவும் அவசியமானதாகிறது. அந்த வரலாறுகள் மூலமாகவே பன்முகப்படுத்தப்பட்ட மனித குலப் பரம்பல்களின் கலைஇ கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை அறிந்து கொள்வதோடு ஒரு இனத்திற்கு இன்னுமொரு இனத்தின் வலிகளையும் வாழ்வியல்களையும் பாடமாகக் கொண்டு வாழமுடியும்.
ஒரு சமூகத்தின் வரலாறுகள் பாதுகாப்பதற்கான முக்கிய நோக்கம் அவர்களுக்கு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைவதோடு அவர்களின் மரபு இதுதான் என்று தெரிய வரும் போது தங்களுடைய முன்னோர்களை விட சிறந்த ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்க வெண்டும் அல்லது தங்களது முன்னோர்கள் வாழ்ந்த சிறப்பான வாழ்வை பாதிக்கும் வகையில் இன்றைய தலைமுறையின் வாழ்க்கை முறை அமைந்து விடக் கூடாது என்னும் முனைப் போடு செயற்பட வாய்ப்பு உள்ளது
அதுமட்டுமல்லாது ஒரு சமூகத்தின் இருப்பு என்பது அவர்களால் பாதுகாக்கப்படும் மரபியல் சார்ந்த வரலாறுகள்இ கலைஇ கலாச்சாரம்இ பண்பாடுஇ தொல்லியல் சார்ந்த விடயங்கை பேனிப்பாதுகாப்பதில் தங்கியுள்ளது.
ஒரு சமூகத்தின் வரலாறுகளை பாதுகாப்பது அல்லது வெளிக் கொண்டு வருவது என்பது அந்த சமூகத்தை சார்ந்தவர்கள்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. சக மனிதர்களாக பிறந்து கல்வியிலும் வரலாறுகளின் விருப்பம் கொன்டு மனித குலத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமையாகும்
எனவேதான் ஒரு கோப்பை தேனீருக்குப் பின்னால் இருக்கும் பல லட்சம் மனிதர்களின் உழைப்புஇ வியர்வைஇ இரத்தம்இ உயிர்த் தியாகங்களைஇ நூலாக ஆவணப்படுத்தும் நோக்கில் வரலாற்று ஆவணக் கானொளியாக முன் பதிவு செய்யப்படுகிறது
உலக மனிதர்களுக்கான உற்சாக பானத்தை வழங்கி இலங்கை தேசத்தை பொருளாதார ரீதியில் தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்குப் பின் பல லட்சம் மக்களின் சோகமான வரலாறுகள் ஏராளம் உள்ளது
உலகம் முழுவதும் பருகும் உற்சாக பானம் தேனீர் இந்த கருஞ்சிவப்பு தேனீர் கோப்பைக்குள் லட்சக்கணக்கான மலயைக மக்களின் இரத்தமும் வியர்வையும் சிந்திக் கிடக்கிறது.
மலையகத் தொழிலாளர்கள் கொழுந்துக் கூடையை அல்ல இலங்கை என்னும் தேசத்தை முதுகில் சுமந்து கொண்டிருக்கும் அவர்களது தியாகங்களையும் வரலாறுகளையும் பேசாமல் வரலாற்று ஆவணமாக்காமல் அவர்களை கௌரவப்படுத்தாமல் இலங்கைக்குள் வாழும் அனைத்து சமூகங்களுக்கும் அவமானம் தான்
அந்த வகையில் மலையக மக்கள் இந்தியா தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக வருகை தந்து 200 வருடங்கள் நிறைவாகியுள்ளது இந்த 200 வருடங்களில் அவர்கள் கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதும் ஏமாற்றங்களும் அவமானங்களும் மட்டுமே
அந்த 200 வருடங்களுக்கு முன் சென்று மலையகத் தமிழர்களின் வாழ்க்கையின் அத்தியாயத்தை புரட்டிப் பார்ப்போமானால்
போர்த்துக்கேயர் கி.பி. 1,540 களின் பின்னர் இலங்கையின் பல பகுதிகளை கைப்பற்றியிருந்தாலும் அவர்கள் தேவாலயங்களை அமைத்தார்களே தவிர தோட்டங்களை அமைக்கவில்லை ஆனால் 1,600களில் வந்த ட்ச்சுக்காரர்கள் பரீட்சார்த்தமாக கோப்பிப் பயிர்களை பயிரிட்டார்கள் பின்னாளில் அது டச்சுக்காரர்களுக்கு கை கொடுக்காததால் கோப்பி கருவாப்பட்டை போன்ற தொழிலை கைவிட்டுள்ளார்கள் என்று ஒரு வரலாறு கூறுகிறது
பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவை தேயிலை தோட்டங்களாக மாற்றம் பெறுகிறது
அது எவ்வாறு எனில் அப்போது இலங்கையில் பல இராச்சியங்கள் தமிழர்களிடமும் சிங்களவர்களிடமும் இருந்துள்ளது அதில் மலைப் பகுதியான கண்டி இராச்சியத்தை 1815ம் ஆண்டு ஆங்கிலேயர் கைப்பற்றுகிறார்கள் கைப்பற்றிய வளம் மிகுந்த வனப்பகுதில் என்ன செய்து பணம் உழைக்கலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் ஏற்கனவே டச்சுக்காரர்கள் செய்து விட்டுப் போன கோப்பிப் பயிர்களை பயிரிடுகிறார்கள் அது அவர்களுக்கு தோல்வியை தருகிறது
அதனால் மலையகப் பகுதிகளில் தேயிலையை பயிரிடுவது என்று முடிவு செய்து 1823 ம் ஆண்டுகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்குவதற்கு முடிவெடுக்கிறார்கள்
இதற்காக மலையக் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்குதற்காகவும் தோட்டங்களில் தங்கி நின்று வேலை செய்வதற்காகவும் கரையோர சிங்களப் பிரதேசங்களாக காணப்படும் மொரட்டுவ, களுத்துறை, காலி, போன்ற இடங்களில் உள்ள சிங்கள மக்களை ஆங்கிலேயர் அனுகிய போதும் சிங்கள மக்களுக்கு அதில் நாட்டம் இல்லாமல் போகவே
அடுத்ததாக சீனர்களை தோட்ட வேலைகளுக்கு அமர்த்துவது என்பதை பரிசீலனை செய்யும் போது சீனர்கள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள் பின்னாளில் தமக்கு பிரச்சனைகள் கொடுப்பார்கள் என்று எண்ணி அந்த முடிவுகளை கை விட்டதின் பின்னர்
இலங்கைக்கு அருகில் உள்ள தமிழநாட்டில் இருந்து தமிழர்களை கூலிக்காக கொண்டு வருவது என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முடிவெடுக்கிறார்கள்
அதன் அடிப்படையில் 1823 ஆம் ஆண்டுகளின் பினரான காலப் பகுதியில் தமிழ நாட்டின் பல பகுதிகளிலும் கண்காணி எனப்படும் ஏஜண்டுகள் மூலமாக தமிழ் நாட்டின் மதுரை கோயமுத்துர், செங்கல்பட்டு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், வட ஆற்காடு, தென்னாற்காடு, உட்பட பல மாவட்டங்களிலும் அலுவலகங்கள் அமைத்து துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் ஏஜண்டுகள் மூலமாகவும் பிரச்சாரங்கள் செய்கிறார்கள்
ஆங்கிலேயரின் பணத்தில் கங்காணிகள் எனப்படும் ஏஜண்டுகளின் பிரச்சாரங்கள் எவ்வாறு இருந்தது என்றால் இலங்கை தோட்டங்களில் வேலை செய்வதால் நிறைய பணம் உழைக்கலாம் வசதியான வாழ்வு வாழலாம் தேயிலைச் செயிடின் கீழ் மாசி (மாசிக் கருவாடு) விளைகிறது தங்கம் கிடைக்கிறது என்று பொய்களையும் ஆசை வார்த்தைகளையும் கூறி ஆயிக் கணக்கான தொழிலாளர்களை திரட்டுகிறார்கள்
இந்த முகவர்கள் எனப்படும் கங்காணிகள் எத்தனை தொழிலாளர்களை பிடித்து தருகிறார்களோ அந்த அளவிற்கு தொழிலாளர்கள் செய்யும் வேலையில் இருந்து கமிஷன் பெறப்பட்டு இந்த முகவர்களுக்கு வழங்கப்படும் என்பதால் கங்காணிகள் பெரும் முனைப்புடன் செயற்பட்டு பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களை இணைத்துக் கொண்டார்கள்
அவ்வாறு தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கை வர விரும்பியதற்கான முக்கிய காரணங்கள் என்னவென்றால் இந்தியாவில் அப்போதைய நிலையில் கடும் பஞ்சம், பசி, பட்டிணி ,சாதிய பாகுபாடுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், தங்களது குடும்பங்கள் வாழ்வதற்கு நிலம் இல்லாமல் தவித்தவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒரு புதிய வாழ்வு கிடைக்கப்ப போகிறது என்று நம்பிக்கையுடன் தனி மனிதர்களாகவும் குடும்பங்களாகவும் இலங்கை வருவதற்கு ஆயத்தமானார்கள்
ஆனால் இதோ பக்கத்தில் தான் இருக்கிறது இலங்கை தீவு வெறும் 22 கிலோ மீற்றர் கடலைக் கடந்தால் சொர்க்க பூமியை அடைந்து எமது வாழ்வு ஒளிமயமாகிவிடும் என்று கனவு கண்டவர்களுக்கு அவர்களது பயணம் அவ்வளவு எளிதாக அமைய வில்லை
அன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் தொழிலாளர்கள் வசிக்கும் அந்தந்த மாவட்டங்களில் இருந்து இராமேஸ்வரம் கடற்கரைக்கு நடந்தே வந்துள்ளார்கள்
ராமேஸ்வரத்தில் இருந்து கப்பல் மூலமாகவும் சிறிய படகுள் மூலமாகவும் அளவுக்கு அதிகமான மக்களை ஏற்றிக் கொண்டு வரும் பொழுது கப்பல்களும், பல படகுகளும் தலைமன்னார் ரமேஸ்வரத்துக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் மூழ்கியுள்ளது
அவ்வாறு 1853ல் ஆம் ஆண்டுகளின் பின்னரான காலப்பகுதியில் கொழும்பு என்ற பெயர் பொறித்த கப்பல் ஒன்றும் 1864 ஆம் ஆண்டுகளின் பின்னரான காலப்பகுதியில் ஆதிலட்சுமி என்ற கப்பல் மூழ்கியதில் பல நுறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக பல வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்
அவ்வாறு மூழ்கிய படகில் ஆதிலட்சுமி என்பது மிக முக்கியமான ஒன்றாகும் இந்த சம்பவத்தை ஆங்கில நூலாசிரியர் ஹென்றி ஷீல்ட் ஒல்கோட் என்பவர் ஆங்கிலேய அரசினால் கங்காணிகளின் உதவியுடன் கப்பல்களில் மலையகத் தொழிலாளர்களை ஒரு தகரப் பேணியில் புழுக்களை அடைத்து கொண்டு செல்வதைப் போல் இலங்கைக்கு கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்
இதே போல் ஒவ்வொரு பல தடவைகள் சிறு சிறு கப்பல்களில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றி வரும் போது படகுகள் நீரில் மூழ்கி பல ஆயிரம் தொழிலாளர்கள் இறந்துள்ளார்கள் இந்த சம்பங்களை டைட்டனிக் கப்பல் மூழ்கிய சம்பவத்துடன் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாற்றை பச்சை ரத்தம் என்னும் ஆவணப்படத்தை இயக்கிய தவமுதல்வன் தனது கானொளியில் ஒப்பீடு செய்துள்ளார்
இந்தியாவிலிருந்து தலைமன்னார் வந்தாகிவிட்டது இனி நமது நழவு அமைதியாகவும் சிறப்பாகவும் இருக்கப்ப போகிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்று நினைத்த அந்த தொழிலாளர் மக்களுக்கு அதைவிடக் கொடுமைகள் காத்திருந்தது
தமிழ் நாட்டிலிருந்து தலை மன்னார் வந்து இறங்கிய தமிழர்கள் மன்னார் வங்காலை பாசிக்குளம் அச்சங்குளம் அரிப்புத்துறை மரிச்சுக்கட்டி புத்தளம் வழியாகவே குருநாகலுக்கும் மாத்தளைக்கும் சென்றுள்ளார்கள்
இவர்கள் பாரிய வனப்பகுதியூடாக புதிய பாதைகளை இந்த மக்களே உருவாக்கிச் செனள்றுள்ளார்கள் என்றும் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடந்து செல்லும் போது பசி, பட்டிணி, நுளம்புக் கடிகளால் உண்டான கொலரா, உட்பட பல்வேறு நோய்கள் காட்டு விலங்குகளின் தாக்குதல்களால் பல ஆயிரம் தொழிலாளர்கள் மரணித்துள்ளார்கள்
இந்த சம்பவமானது 1841 லிருந்து 1849 வரை தலைமன்னாரிலிருந்து மாத்தளைக்கு நடந்து சென்றவர்களில் 70 ஆயிரம் பேர் இறந்ததாகவும் 1823 லிருந்து 1895 வரை 2 லட்சம் பேர் கொலரா விஷக் காய்ச்சல் பசி பட்டினி பாம்புக்கடி காட்டு விலங்கு தாக்குதல்களால் இறந்திருக்கிறார்கள்
இவ்வாறு அழைத்துவரப்பட்ட மலைய மக்களின் வாழ்க்கை என்பது துயரங்கள் நிறைந்த மிக மோசமான ஆரம்பமாகவே இருந்துள்ளது இந்த சம்பவத்தை தலைமன்னாரிலிருந்து காடுகள் வழியே நடந்து போகும் போது இரண்டு பக்கமும் மண்டை ஓடுகளும் எழும்புக் கூடுகளும் குவிந்திருந்ததாக மேலும் ஒரு ஆங்கில அறிஞர் குறிப்பிட்டுள்ளார்
இந்த தகவல்களை மலையக இலக்கிய கர்த்தாவும் எழுத்தாளருமாக என்று மாத்தளை சோமு அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழநாட்டிலிருந்து துயரச் சம்பவங்களோடு அழைத்துவரப்பட்ட தமிழர்கள் இலங்கையின் மத்தியப் பகுதியான மாத்தளையில் இருந்து கண்டி தலவாக்கலை, நுவரெலியாm ஹட்டன்m நாவலப்பிட்டிm போன்ற பகுதிகளில் குடியேற்றப்பட்டார்கள்
ஒரு ஆய்வுத் தகவலின் படி 1911ல் 5லட்சத்து 30ஆயிரத்து தொள்ளாயிரத்து 83 தொழிலாளர்கள் மலையகத்திவ் பணிபுரிந்துள்ளார்கள் இந்த தொகை வடகிழக்கில் வாழ்ந்த தமிழர்களை விட அதிகமாக அப்போது இருந்துள்ளது
அதனடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் கடின உழைப்பின் மூலம் கோப்பிப் பயிர்ச் செய்கையானது 1824ம் ஆண்டு 5 ஆயிரம் ஏக்கரிலும் 1881ம் ஆண்டு 256000 ஏக்கரிலும் உயர்ந்தது கோப்பிப் பயிர் நாளடைவில் நோய்த் தாக்கங்களால் வீழ்ச்சியடையவே அந்த சரிவை தேயிலை மீட்டெடுத்தது
1887ம் வருடம் 4,700 ஏக்கரிலும் 1971 ம் ஆண்டு 59,7, 000 ஏக்கரிலும் தேயிலை பயிரிடப்பட்டதாக சில வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றது
மேலும் 1911ம் ஆண்டுகளில் 5,5,000 இருந்த மலையக மக்கள் தொகை 1971ம் ஆண்டு 11,74,000 லட்சமாக அதிகரித்தது அதன் கூடவே இலங்கையின் பொருளாதாரமும் உயர்ந்தது ஆனால் மக்களின் வாழ்க்கை நிலையில் எந்த உயர்வும் காணப்படவில்லை
இதற்குக் காரணம் பெருந் தோட்ட முதலாளித்துவ கட்டுமானம் என்று பல கல்வியாளர்கள் தெரிவித்திருந்தார்கள்
இலங்கையின் ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர்களிடம் இருந்தபடியால் இந்திய தமிழகத்தில் இருந்து மக்களை கொண்டு வருவதற்கு அவர்களுக்கு இலகுவாக அமைந்தது அவ்வாறு அவர்கள் மலையகம் வரும் போது நடைபெற்ற மரண சம்பவங்கள் ஒழுங்காக பதிவு செய்யப்படவும் இல்லலை பேசப்படவும் இல்லை அவர்களது தியாகங்களுக்கு ஒழுங்கான மதிப்பளிக்கப்படவும் இல்லை என்று என்று மலையக கல்வியாளர்கள் படைப்பாளர்களும் கவலை கொள்கிறார்கள்
இவ்வளவு துன்ப துயரங்கள் மரண வேதனைகளை அனுபவித்து ஒரு இடத்தில் குடியமர்ந்த பின்னரும் நிம்மதியாக இருந்தார்களா என்றால் இல்லை இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னும் மலையக மக்களின் வாழ்வியலும் வரலாறுகளும் மிக சோகமயமானது
மலயைக மக்கள் தங்கள் உயிரையும் வாழ்வையும் பணயம் வைத்து இந்த இலங்கையை உருவாக்கியவர்கள் இன்றுவரை அவர்கள் நிம்மதியையும் சந்தோசத்தையும் அனுபவிக்காதவர்கள்
ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட லயன் வீடுகள் அவர்கள் வசிக்கு எட்டு அடி அறைக்குள் சமையல் அறை,குடும்ப உறுப்பினர்கள் துங்குவது, குழந்தைகள் படிப்பது என்று சுதந்திரங்கள் இல்லாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்
தோட்ட முதலாளிகளின் அனுமதியில்லாமல் வெளியில் செல்ல இயலாது மலையகத் தொழிலாளர்களின் இரத்தத்தில் வெளிநாடுகளுக்கு சிலோன் டீ என்று ஏற்றுமதி செய்து பணம் சம்பாதித்த ஆங்கிலேய அரசு அதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கமும் இவர்களுக்கான நல்ல வாழ்வை அளிக்கத் தவறியுள்ளது
இலங்கை வருவதற்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளிழல் இருந்தும் அழைத்து வரப்பட்ட தமிழர்கள் மாத்தளை வரை பல பல சவால்களை கட்ந்து தங்களுடைய உழைப்பாளும் உயிர் தியாகத்தாலும் நூறு வருடங்கள் கடந்து அழகான மலையக தேசத்தை உருவாக்கி இலங்கைக்கு நல்லதொரு வருமானத்தை பெற்றுக் கொடுத்த அந்த தமிழர்கள் மீண்டும் வஞ்சிக்கப்படுகிறர்கள்
ஆம் அவர்களது இலங்கைக் குடியுரிமைச் சட்டம் பறிக்கப்பட்டு பல லட்சம் மக்களை நாடற்றவர்கள் என்னும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்
இலங்கை குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் ஏறக்குறைய 7 லட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர் 1949ம் ஆண்டில் மேலும் ஒரு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இலங்கை கேட்டுக் கொண்டது
ஆனால் இந்தியா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை அதன் பிறகு 1948ல் இருந்து 1964 வரை எந்த நாட்டையும் சார்ந்திராமல் வாழக் கூடிய சூழல் இந்த மக்களுக்கு ஏற்பட்டது
இதில் சிறிமாவோ பண்டாரநாயக்க லால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்தம் 1964ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ம் திகதி கையெழுத்திடப்பட்டதனடிப்படையில் 5லட்சத்து 25 ஆயிரம் மக்களை இந்தியா ஏற்றுக் கொள்வது எனவும் 3 லட்சம் பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது
அதில் மீதி 1லட்சத்து ஐம்பதாயிரம் பேர் எந்த நாட்டையும் சாராதவர்களாக இருந்திருக்கிறார்கள் பின்பு இவர்கள் தான் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் குறிப்பாக மன்னார் வவுனியா கிளிநொச்சி போன்ற பகுதிகளில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது
மலையக மக்களைப் பொறுத்த வரை அவர்கள் பாடுபடும் அளவிற்கு கூலிகள் வழங்கப்படுவதில்லை அவர்களுக்கான கல்வி சுகாதாரம் என்பன மிகவும் குறைபாடுகளுடனேயே கணப்படுவதாக மலையகத் தலைவர்கள் சிலரது கருத்தாக உள்ளது
1964ம் ஆண்டு சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின் இந்தியா ஏற்றுக் கொள்வதாக கூறிய 5 லட்சம் மக்கள் இங்கிருந்து அனுப்பபட்டார்கள் அந்த மக்களுக்கான அன்றாட வாழ்வியல் கொடுமைகள் ஒருபுறம் இருந்தாலும் கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தேயிலை தோட்டங்களிலும் இயற்கையோடும் மலைகளோடும் ஒன்றி வாழ்ந்த அந்த மக்கள் வெளியேற்றப்பட்டது மிகவும் துன்பியல் சம்பவம்
தாங்கள் வாழ்ந்த ஒரு தேசத்தை பிரிந்து இனிமேல் அந்த தேசத்திற்குள் நாங்கள் வாழ மாட்டோம் என்று நினைக்கும் அந்த தருணங்கள் மிகக் கொடுமையாக அந்த மக்களுக்கு இருந்துள்ளது
அந்த மக்களை மலையகத்திலிருந்து புகை வண்டி மூலமாகவே தலைமன்னார் வரை அழைத்துச் சென்றுள்ளார்கள் அந்த ரயிலை ஒப்பாரிக் கோச்சி (புகைவண்டி) அல்லது அழுகை ரயில் என்றே குறிப்பிடுவார்கள் 150 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பின் பிரியும் போது ஏற்படும் வலியின் வேதனைகள் அவை என்றே சொல்ல வேண்டும்
இவ்வாறு இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகத்திற்குச் சென்ற தோட்டத் தொழிலாளர்கள் நீலகிரி கர்நாடகா கேரளா போன்ற பகுதிகளுக்கு இரப்பர் மற்றும் தேயிலை தோட்ட வேலைகளுக்கும் சென்றுள்ளதாக வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
உலகம் முழுவதும் அருந்தும் ஒரு உற்சாக பானமாக இருக்கும் தேநீருக்கு பின்னால் பல லட்சம் மக்களின் உழைப்புகளும் கண்ணீர்கள் உயிர்தியாகங்கள் நிறைந்து கிடக்கிறது இந்த நவீன கொத்தடிமைத்தனங்கள் மாற்றப்பட்டு மலையக மக்களின் வரலாற்றுச் சம்பவங்கள் பல வழிகளிலும் பேசப்பட்டு அடுத்தடுத்தத் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாறுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்