இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரும் பங்காற்றும் சுற்றுலாத்துறைக்கு இதுவரை காலமும் வட மாகாணத்தின் பங்களிப்பு சற்று குறைவாகவே இருந்தது.

எதிர்காலத்தில் வடமாகாண சுற்றுலாத்துறை வளர்ச்சி மிக உயர்வான நிலையை அடைவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டியது அனைவரதும் முக்கிய தேவையாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு
வடக்கிற்கான கைத்தொழில் துறைகளின் மன்றம் NCI , (Northern Chamber of industries)
தனது அங்கத்தவர்களின் தொழில் துறை வளர்ச்சியினை மேம்படுத்த எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றாக கடந்த மே மாதம் 23ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் நடந்த சுற்றுலா துறைசார் கண்காட்சியில் வட மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை இலங்கையின் மேதகு ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்களிடம் கையளித்தது.
கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இக்கண்காட்சியில்
இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள சுற்றுலா துறையின் பங்குதாரர்களுடன்
முதல் முறையாக வடக்கிற்கான கைத்தொழில் துறைகளின் மன்றம் NCI , (Northern Chamber of industries) வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தனது அங்கத்தவர்களின் வளர்ச்சிக்கான புதிய மைல் கல் ஒன்றினை எட்டியுள்ளனர் .
வட மாகாணத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள், புராதன சின்னங்கள், சுற்றுலா விடுதிகள், சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்கள், இயற்கை காட்சிகள், கலை கலாச்சார அம்சங்கள், வடமாகாணத்தின் பாரம்பரிய உணவுகள், பொழுதுபோக்கு மையங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நேரடி விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் இலங்கையின் மேதகு ஜனாதிபதி அவர்களுடன் சுற்றுலா துறை அமைச்சர், சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர், அரச உயர் பிரதானிகள், யேர்மன் நாட்டு தூதுவர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்த மாபெரும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்ககான ஒத்துழைப்பினை யேர்மன் நாட்டின் OaV நிறுவனம் தனது BMO திட்டத்தின் ஊடாக வழங்கி இருந்தது.