https://mpclg.gov.lk/webமாகாண சபைத் தேர்தலை நடத்துவதது தொடர்பில் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன கருத்து தெரிவித்துள்ளார்

தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சுசார் மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வில்
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளையின் போது மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் எதிர்க் கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இதற்கு அவர் மேலும் பதில் அளிக்கையில் மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் சட்ட ரீதியான ஒருசில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.ஆகவே இதற்கமைய அமைச்சு மட்டத்தில் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் தேர்தலை நடத்துவதற்கு கடந்த மாதங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் அமைச்சுசார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பைசர் முஸ்தபா எம்.ஏ.சுமந்திரன் யோசனை
மாகாண சபைத்தேர்தல்கள் தொடர்பில் முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்த திருத்த யோசனை மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மக்களின் ஜனநாயக உரிமை
மாகாண சபைகள் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
தொழில்நுட்ப ரீதியில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அதுவரையில் மாகாண முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்தி நிர்வாக கட்டமைப்பை ஸ்தாபிக்க துரிதகர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்