வாழ்வில் வெற்றி பெற பண முகாமைத்துவம் இலகுவான முறையில்-ஜெகன்
சாதாரண குடும்ப வாழ்விலிருந்து பெரிய நிறுவனங்களை வெற்றிகரமாக கையாள்வதற்கு இந்தபண முகாமைத்துவம் மிகவும் அவசியமாகிறது
இன்றைய விலைவாசி பொருளாதார நெருக்கடியான கால கட்டத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டு பேரும் வேலைக்குச் சென்று உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் குடும்பத்தை நிர்வகிப்பவர்கள் இருக்கின்றார்கள்
எவ்வளவுதான் உழைத்தாலும் திருப்தியான அளவ வருமானம் வந்த போதும் மாத இறுதியில் வரவும் செலவும் சரியாக இருக்கும் அல்லது ஒன்றிரண்டு கடன் தொகை பாக்கியிருக்கும்
மன விரக்தி
நினைத்த பொருட்களை வாங்க முடியவில்லையே கடன்களை கட்ட முடியவில்லையே ஒரு கடனை கட்டுவதற்காக புதிதாக ஒரு கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறதே என்னும் மனக் கவலை மற்றும் விரக்தியில் குடும்பங்களுக்குள் பிரச்சனை பிளவு நிம்மதியின்மை தலைவிரித்தாடத் தொடங்கும் இவற்றிலிருந்து விடுபடுவதற்கு மிக இலகுவான பண முகாமைத்துவத்தை கையாண்டாலே போதும் உங்களால் ஓரளவு பணத்தை சேமிக்கவும் சிறு சிறு கடன் தொல்லைகள் இல்லாமலும் வாழமுடியும்
முதலாவது உங்களது வருமானம் எவ்வளவு
முதலாவது உங்களது குடும்பத்தின் நிலை என்ன என்பது பற்றிய தெளிவான சிந்தனை வேண்டும் உங்களது மாத வருமானம் எவ்வளவு மாதத்தில் எது எதற்கு என்ன என்ன செலவாகிறது குடும்பத்தின் சாப்பாட்டு செலவு எவ்வளவு பிள்ளைகளின் கல்விச் செலவு ஒரு மாதத்தில் ஏதேனும் மருத்துவ செலவுகள் ஏற்படுகிறதா மின்சாரத்திற்கான செலவு தண்ணீர் செலவு தொலைபேசி இரு சக்கர வாகனங்களுக்கான பெட்ரோல் செலவு இவ்வாறு எந்த மாதிரியான செலவுகளை ஒரு மாதத்தில் சந்திக்கின்றீர்கள் என்பதனை ஞாபகத்தில் வைத்தது பட்டியலிட வேண்டும் இவ்வாறு செலவுகளை பட்டியலிட்டு செலவு செய்வதுதான் பண முகாமைத்துவத்தின் முதல் வெற்றி
அன்றாடச்செலவுள்
அன்றாடச் செலவுகளை குறித்து வைத்துக் கொள்ளும் அதே நேரம் மாத இறுதியில் செலுத்த வேண்டிய மின் கட்டணம் தண்ணீர் கட்டணம் தொலை பேசி கட்டணம் போன்றவற்றிற்கான பணத்தொகையை கிடைக்கும் பணத்தில் சிறு தொகையை அப்போதே ஒதுக்கி விடுங்கள் திடீர் தேவைகளுக்காக இவ்வாறு ஒதுக்கிய பணத்திலிருந்து எடுக்த்து வேறு ஒரு தேவையை நிறைவேற்றிக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போகப் போக இவ்வாறான பண நெருக்கடியை இலகுபடுத்தும்
செலவுகளின் வீதம்
அரச உத்தியோகத்தர்களாக இருக்கலாம் அல்லது வேறு எந்த தொழில்கள் செய்பவராகவும் இருக்கலாம் உங்களது மாத வருமான எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதற்குள்ளாகவே உங்களது செலவுகளை மட்டுப் படுத்திக் கொள்ளுங்கள் முடிந்தளவு தேவையில்லாத செலவுகளை குறையுங்கள் அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் நாங்களும் பணக்காரர்கள்தான் எங்களிடமும் எல்லா பொருட்களும் உள்ளது என்று காட்டிக் கொள்வதற்காக தேவையில்லாத பொருட்களை கடன் பெற்று வாங்கி குவிக்காதீர்கள் இவ்வாறான செயற்பாடுகள் உங்களுக்குகடன் நெருக்கடிகளையும் அவமானத்தையும் மட்டுமே பெற்றுத் தரும் இருப்பதை கொண்டு சிறப்பாக வாழுங்கள் அப்போதுதான் கடன் பெறாமல் உங்களால் நிம்மதியாக வாழமுடியும்
சேமிப்பு
எவ்வளவுதான் உழைத்தாலம் மாத இறுதியில் கையும் கணக்கும் சரியாக இருப்பதே பல குடும்பங்களின் வாடிக்கை வரவோடு செலவு சமமாக இருப்பது சந்தோஷத்திற்கு உரிய விடயம் அல்ல செலவுடன் ஒப்பிடும் போது வரவில் ஆகக் குறைந்தது 5 வீதமாவது மீதமாக வேண்டும் அப்போதுதான் திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகளை முகாமைத்துவம் செய்ய முடியும் அப்படி இல்லை என்றால் யாரிடமாவது கடன் பெற வேண்டிய நிலை உருவாகும்
இரண்டாவது வருமானம் தேவை
இன்றைய பரபரப்பான சூழல் பொருளாதார விலையேற்றம் தேவையே இல்லாவிட்டாலும் செலவழித்தாக வேண்டி உள்ள சில நிகழ்வுகள் இவ்வாறு செலவை அடுக்கிக் கொண்டே போகலாம் இதற்காக நாம் செய்யும் ஒரு தொழிலில் இருந்து வரும் வருமானம் போதாது அதற்காக நாம் ஒவ்வொருவரும் இரண்டாவது துணைத் தொழில் செய்து வருமானம் பெற வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம் அவ்வாறு இரண்டு தொழில் இருந்தால் ஒன்றிலிருந்து வரும் வருமானம் குடும்பச் செலவுக்கு பயன்படுத்தினாலும் இரண்டாவது வருமானத்தை சேமித்து எமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் இவ்வாறு துணைத் தொழில்கள் ஏராளமாக இருக்கிறது நமது மக்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை வீட்டுத் தோட்டங்கள் தையல் சிறு சிறு வியாபாரங்கள் இணையத்தளங்கள் மூலமாக வருமானம் பெறுவது போன்ற பல தொழில்களை செய்து வருமானம் பெறலாம் இதுதான் என்று இல்லை உங்களிடம் இதர திறமைகள் என்னவெல்லாம் இருக்கிறதோ அதன் மூலமாக வருமானம் பெற்றுக் கொள்வதற்கு வழிகள் உள்ளது மக்கள் அதின் ஆர்வம் காட்டாமலும் அவற்றைப் பற்றிய தேடல் இல்லாத காரணத்தினாலும் கிடைக்கும் ஒரு வருமானத்தில் பயந்து பயந்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் இந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வருவதற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்
திட்டமிடுவது எப்படி
வாழ்வில் எந்த செயற்பாடுகளை செய்தாலும் அதற்காக திட்டமிடுது அவசியம் சரியான முறையில் திட்டமிடும் போதுதான் நல்ல வெற்றி கிடைக்கும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான ஏதேனும் ஒரு செயற்பாட்டினை செய்யும் போது ஓரளவு பணத்தை கையில் வைத்துக் கொண்டு திட்டமிடுங்கள் முழுவதுமாக கடனை பெற்றுத்தான் அத்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதனை உடனடியாக கைவிட்டுவிடுங்கள் முழு திட்டத்தையும் கடன் பெற்று செய்யும் போது காலச் சூழ்நிலையால் அவை தடைப்பட்டு இடைநிறுத்தப்பட்டால் வாழ்க்கையில் நிங்கள் மீளமுடியாத சுமைக்குள் தள்ளப்படுவீர்கள் எனவே சிறு பெட்டிக்கடை வைப்பதாக இருந்தாலும் வியாபாரத்திற்காக வாகனம் வேண்ட நினைத்தாலும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு திட்டமிடுங்கள்
நம் ஒவ்வொருவரிடமும் மாற்றமுடியாத பழக்கம் ஒன்று உள்ளது அதாவது கடன் பெறுதல் ஏதோ ஒரு அவசரத் தேவைக்கு கடன் பெற்றால் அதனை உங்களின் உழைப்பின் மூலம் வரும் சொந்த பணத்தில் திருப்பி கொடுத்து விடுங்கள் ஒரு கடனை அடைக்க இன்னொருவரிடம் கடன் வாங்கி முன்னைய கடனை அடைக்க நினைக்காதீர்கள் இந்த பிரச்சனை தீராது அதுவே பழக்கமாகி கடனும் வட்டியும் அதிகரித்துக் கொண்டே போகும் இதனால் குடும்பத்தில் நிம்மதியிருக்காது சமூகத்திலும் மதிப்பு இருக்காது கடன் விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்
கடன் கொடுக்காதீர்கள்
இன்றைய சமூகம் நம்பிக்கையீனத்தாலும் ஏமாற்று வித்தைகளாலும் பெரும்பாலும் இயங்குவதை உணர முடிகிறது இவ்வாறு செல்வது ஆரோக்கியமான விடயம் இல்லை யாரேனும் ஒருவர் அவசரத் தேவையாக கடன் கேட்கும் போது நீங்களும் கொடுத்து விடுவீர்கள் கடன் பெற்றவர் சரியான நேரத்தில் திருப்பித் தர வேண்டும் அவர் தராத பட்சத்தில் நீங்களாக கேட்கும் போது அங்கு எழும் பாரிய பிரச்சனை தாங்கள் ஏதோ கோடீஸ்வரர்கள் போலும் நீங்கள் ஏதோ கடன் பெற்றவர்கள் மாதிரியும் பிரச்சனை உருவாகி அதுவரை நல்ல நட்புடனும் அன்யோன்யமாக இருந்தவர்களுக்குள் பிணக்குகளும் பிரிவுகளும் ஏற்பட்டு விடும் இவ்வாறான சிக்கல்களை தவிர்த்து உங்களது மரியாதையை காப்பாற்றிக் கொள்ள கடன் கொடுக்காதீர்கள்
அதி முக்கியமானவர்களுக்கு என்ன செய்யலாம்
எல்லோரும் நல்லவர்கள்தான் சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் அவர்களை கெட்டவர்களாக்கி விடுகிறது ஆனால் சிலர் எல்லோரிடமும் கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளவர்களும் இங்கு வாழ்கிறார்கள் அவர்கள் மத்தியிலும் உங்களுக்கு முக்கியமான சிலர் கடன் கேட்டு வந்தால் அவரிடம் இல்லை என்று சொன்னாலும் பிரச்சனை பிரிவுகள் உண்டாகும் அப்படி கொடுத்தாலும் திரும்பவும் கிடைக்காமல் போகும் போது பிரச்சனை என்பதுடன் நீங்கள் உழைத்த பணமும் வீணாகிப் போய்விடும்
உதாரனமாக கடன் பெற வருபவர் ஒரு லட்சரூபாய் கேட்டால் ஏதாவது இல்லாத காரணத்தை சொல்லி 10000 ரூபா கொடுங்கள் வருபவர் உங்களது நிலமையை புரிந்து கொண்டு போய்விடுவார் உங்கள் மீதான மதிப்பும் நம்பிக்கையும் விட்டுப் போகாது நீங்கள் கொடுத்த தொகை சிறிதுதானே என்று அவர் திருப்பித் தரக் கூடும் அவ்வாறு தராவிட்டாலும் பரவாயில்லை ஏனென்றால் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அது திரும்பவும் கிடைக்காமல் பிரச்சனைகளை உண்டு பண்ணுவதை விட பத்தாயிரம் ரூபா தானே என்று மனதை தேற்றிக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம் ஆகவே கடன் கொடுப்பதும் தவறு கடன் பெறுவதும் தவறு
கடனை திருப்பிக் கொடுங்கள்
ஒரு வேளை அவசரத் தேவையாக கடன் பெற்றால் அதை வாக்களித்தது போல் உரிய திகதியில் திருப்பிக் கொடுத்து விடுங்கள் ஏனென்றால் கடன் கொடுத்தவர் உங்களின் பரிதாப நிலை கண்டு அவர்களுடைய தேவைகளுக்கு வைத்திருந்த பணத்தையே கொடுத்திருப்பார்கள் நீங்கள் அதை உரிய நேரத்தில் திருப்பி கொடுக்காவிட்டால் அவர்களுடைய குடும்பங்களில் பிரச்'சனைகள் எழும் என்பதை புரிந்து நடவுங்கள் இவ்வாறு கடனை பெற்று அதை சரியாக திருப்பிக் கொடுக்கும் போது உங்களது மதிப்பு சமூகத்தில் உயர்ந்த நிலையில் காணப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
எவே தனி மனிதன் உட்பட குடும்பங்கள் வியாபார நிலையங்கள் நிறுவனங்கள் அனைத்தின் வெற்றிகளும் நேர்மையான முறையில் மேற்கொள்ளப்படும் பணம் முகாமைத்துவத்திலேயே தங்கியுள்ளது மேலும் மேலும் பணமுகாமைத்துவம் பற்றி கற்று தெரிந்து கொண்டு உங்கள் வாழ்வை சிறப்பாக வாழுங்கள்
நன்றி
ஜெகன்
COMMENTS