கிளுவை மரம் என்பது 2000ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை ஒவ்வொரு வீட்டு வளவு வேலிகளில் இந்த கிளுவை மரம் வேலியாக மிகவும் நேர்த்தியாகவும், பாதுகாப்பாகவும், இருக்கும் கிளுவை மாத்திரம் அல்ல பல மரங்களை சொல்லலாம்
இந்த கிளுவை மரம் குறித்த ஒரு மாவட்டத்தில் மாத்திரம் இருக்கும் என்று சொல்ல முடியாது இலங்கையில் அனைத்து கிராமப் பகுதிகளிலும் காணப்பட்டது இன்று கிளுவையோடு சேர்த்து பல வேலி மரங்கள் தமிழர்களின் வாழ்வியலில் இருந்து மறைந்து போயுள்ளது இதற்குக் காரணம் பல இருந்தாலும் நவீனத்துவத்திற்குள் நாம் தள்ளப்பட்டது முதல் காரணம் எனலாம்
குறிப்பாக 25-30 வருடங்களுக்கு முன்னர் கூடுதலான கிராமங்களில் மண் சுவர் வீடுகள் காணப்பட்டது பிறகு சீமெந்து வீடுகள் கட்டிட வீடுகளுக்கு மாற்றமடைந்ததால் அவர்களது வேலிகளையும் சீமெந்து கற்களால் மதில் சுவர் அமைத்துக் கொண்டார்கள் இதனால் வேலிகளாக இருந்து பலன் தந்த கிளுவை உட்பட பல மரங்கள் இல்லாமல் போனது
இவ்வாறு பச்சை இலை கொண்ட மரங்களை ஒவ்வொரு வீட்டின் வேலிகளாக இருக்கும் போது சுத்தமான காற்றினை அது பெற்றுத் தந்தது வெயில் நேரங்களில் நிழலை தந்தது அதில் விஞ்ஞான ரீதியாகவும் மெய்ஞான ரீதியாகவும் பல நண்மைகள் காணப்பட்டது
இவ்வாறான வேலிகாக்கும் மரங்களினால் நம்மால் பல நண்மைகள் பெற்றுக் கொள்ள முடிந்தது அந்த நேரங்களில் அதன் அருமை தெரியவில்லை ஆனால் இன்று அவ்வாறான வாழ்க்கையை நினைத்து ஏங்காதவர்கள் எவரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
பல இடங்களில் இவ்வாறான கிளுவை உட்பட பல மரங்களின் பயன்பாடுகள் இல்லாமல் போனாலும் சில இடங்களில் இவை பாதுகாக்கப்படுகிறது அவ்வாறுதான் உயிர்வேலி யாழ்ப்பாணத்தினதும் தீவகத்தினதும் பாரம்பரியமாக பாதுகாக்கப்படுகிறது
இது தொடர்பாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.எம். றியாஸ் அகமட் அவர்களின் கருத்துகள் சில
வேலி வகைகள்
வீடு இருக்கும் வளவிற்கு அல்லது பயிர் விவசாய நிலங்களுக்கு எல்லையிட்டு பாதுகாப்பதற்கு பல வகையான வேலிகள் காணப்படுகின்றன. தென்னோலை கிடுகு வேலைி, பனைமட்டை வேலி, கம்பி வேலி, தகர வேலி, முட்கம்பி வேலி, மதில் வேலி, உயிர்வேலி, போன்ற பல வகையான வேலிகள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணப் பிரதேசங்களில் குறிப்பாக தீவுப் பகுதியில் உயிர்வேலிகள் இன்றும் தமது தொன்மையையும் பழமையையும் பாரம்பரியத்தையும் இழக்காது இன்றும் காணப்படுகின்றன.
இது அந்தப் பிரதேசங்களுக்குரிய பாதுகாக்கப்படவேண்டிய பாரம்பரியமாகும்.
வகைகள்
முட்கிளுவை, இலைக் கிளுவை, கள்ளிச் செடி, நொச்சி மரம், பனை மரம், பூவரசு,இலந்தை மரம், போகன்விலா, வாதராணி, முள்முருங்கை, சீமைக்கிளுவை, போன்ற மரங்கள் உயிர்வேலிக்காகப் பாவிக்கப்படுகின்றன. கிளுவை உயிர்வேலியே யாழ்ப்பாணத்துத் தீவக வாழ்வியலுடன் நெருங்கிய தெடர்புடையதாகவும் பாரம்பரியமாகப் பேணப்படக்கூடியதுமான ஒன்றாகக் காணப்படுகின்றது என்பது அவதானமாகும்
.விஞ்ஞானப் பெயர்
கொமிபொறா கொடாற்றா என்ற தாவரவியற் பெயர் கொண்ட பேர்சறாசியே குடும்பத்தைச் சேர்ந்த முக்கூட்டு இலைகளையும் மென்மையான தண்டையும் உடைய இலைகளை உதிர்க்கின்ற உயிர்வேலிகளுக்காகப் பாவிக்கப்படுகின்ற மரமே கிளுவை மரமாகும். இந்த கிளுவையிலும் முட்கிளுவை, இலைக்கிளுவை, சிறுகிளுவை, பெருங்கிளுவை, செங்கிளுவை,வெண்கிளுவை, என்று பல உள்ளுர்ப் பெயர்களில் ஒரே மரங்கள் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
பயன்படுத்தும் முறை
ஒரு ஏக்கருக்கு நான்கு பக்கமும் உயிர்வேலி அமைக்க 6 அடி கொண்ட 900 கதியால்கள் தேவைப்படுகின்றன. ஆடு மாடு பன்றிகள் நுழையாமலிருக்க அரையடிக்கு ஒரு கதியாலும் அதனைவிடச் சிறிய விலங்குகள் மனிதர்கள் நுழையாமலிருக்க ஒரு அடியில் 3 கதியால்களும் நடலாம். கதியால்கள் அதிகமாகக் கிடைக்குமிடத்து நெருக்கி மதில்கள் போலவும் நடலாம். கிளுவை நன்றாக வறட்சியைத் தாங்கக்கூடியது. நட்டு இரண்டு மாதங்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை. நட்டு 20 நாட்களில் பொதுவாகத் துளிர்விடும் கிளுவையானதுஇ 6 மாதங்களில் முழு வேலியாக வளர்ச்சியடைந்துவிடும். ஒவ்வொரு வருடமும் 6 அடிகளுக்கு மேல் வளர்ந்த கிளைகளை வெட்டி நீக்கிவிடலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் வெட்டப்பட்ட தலைப் பகுதிகள் மற்ற மரங்களுடன் ஒட்டி இணைந்து வலுவான மதில் போன்ற அமைப்பைக் கொடுக்கும். பல்வேறு வடிவங்களையும் கொடுக்கும். இதன் பைற்றோசோசியோலொஜி ( தாவர சமூகவியல்) ஆய்வுக்குரியதாகும்.
பல்வேறு நண்மைகள்
இயற்கையோடு இரண்டறக் கலக்கும் இந்த உயிர்வேலி வாழ்வியலானது பல்வேறு நன்மைகளைச் செய்கின்றது. நிலத்தையும் மனிதர்களையும் சொத்துக்களையும் பயிர்களையும் பாதுகாக்கின்றது. பயிர்களை வெப்பக் காற்று, பூச்சிதாக்கம், போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது. மண்ணரிப்பைத் தடுக்கின்றது,. காற்று வேலியாகவும் தொழிற்படுகின்றது. பல்வேறு ஊர்வன, பூச்சிகள், பறவைகள், போன்றவற்றுக்கு வாழிடமாகத் தொழிற்பட்டு உயிர்ப்பல்வகைமைப் பெருக்கத்தையும் ஊக்கவிக்கின்றது.
சித்த மருத்துவத்தில் பங்கு
ஆயுர்வேதத்திலும், யுனானி மருத்துவத்திலும், கிளுவை முக்கிய மருந்தாக இடம் பிடித்துள்ளது. சுவைக்க சிறிது புளிப்புடன் துவர்ப்பும் சேர்ந்தது போல சுவை கொண்ட கிளுவை மரத்தின் இலைகள், வேர், தண்டு, பட்டை, மற்றும் பிசின் போன்றவை பல்வேறு வியாதிகள் தீர்க்க உதவுகின்றன. மிகவும் அதிகமான மருத்துவ குணம் கொண்ட கிளுவையானது சிறுநீரக, கல்லீரல், நரம்புத் தொகுதி, சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கும் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண், கருப்பை மாதவிடாய் நோய்கள், சளி, நாள்பட்ட கட்டி போன்றவற்றிற்கு மருந்தாகவும் இந்த மரத்தின் பிசின் வயாகராவாகவும் பயன்படுகின்றது.
கால்நடைகளுக்கு
கால்நடைகளுக்கு உணவாகவும், குறிப்பாக இதன் இலைகளில் காணப்படும் புரதம் வெள்ளாட்டின் வளர்ச்சிக்கும் உதவுவதுடன் மேலும் சுரை, பூசணி, பீர்க்கு, போன்ற கொடிகள் பற்றிப் படர்ந்து வளர்வதற்கும் இந்த வேலிகள் உதவுகின்றன. இந்த மரங்களின் அடியில் கட்டப்படும் மாடுகள் கோமாரி நோய்த் தாக்கத்திலிருந்து பாதுக்காக்கப்படுகின்றன. கதியால்களாற் பட்டியிடப்படும் செம்மறி ஆடுகள் கோடைகால வெப்பத்தினால் உண்டாகும் கழிச்சல் நோய் அம்மை நோய், துள்ளுமாரி, போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
உயிர்வேலிகள் மருவிப் போய் அந்த இடத்தைக் கற்கள் எடுத்துக்கொண்டிருக்கின்ற இந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தினது குறிப்பாக தீவகத்தினது வாழ்வியலோடு இணைந்த மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நேயமான கிளுவை உயிர்வேலிகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரியமாகும்.
ஏ.எம். றியாஸ் அகமட்
சிரேஸ்ட விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்