பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பெண்கள் அரசியல் பங்கேற்பு என்பது இன்றைய சூழலில் பெண் சமுதாய முன்னேற்றத்திற்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான அடக்கு முறைகளை ஒழிப்பதற்கும் மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகிறது
பலதரப்பட்ட குடும்ப நெருக்கடி, பொருளாதாரச் சுமை, போன்ற பிரச்சனைகளை கொண்ட குடும்பங்களை நிர்வகிக்கும் பெண்களால் அரசியல் மூலம் நல்ல தலைமைத்துவத்தை கொடுத்து சமூக மாற்றத்தை உண்டாக்க முடியும் ஆங்காங்கே சில இடங்களில் பெண்கள் அரசியலில் செயற்பட்டு வந்தாலும் உலகளவில் பல அரசியல் அரங்கங்களில் பெண்கள் குறைவாகவே உள்ளனர் இந்த நிலை மாற வேண்டும்
1.அரசியலில் ஏன் பெண்கள் பிரதிநிதித்துவம்
பிரதிநிதித்துவம்: மாபெரும் வளர்ச்சி கண்டுள்ள டிஜிட்டல் யுகத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஏற்றத்தாழ்வுகள், உடல், மன, ரீதியான துன்புறுத்தல்கள், உள்ளுரிலும், வெளி நாடுகளிலும் நடப்பதை நேரடியாக பார்க்கின்றோம் செய்திகளாக கேள்விப்படுகின்றோம்
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் துன்புறுத்தல்களை பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி பகிர்ந்து கொள்ளவும் பாதிக்கப்படும் பெண்களுக்காக குரல் கொடுத்து நீதியை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியலில் பெண்களின் தலைமைத்துவம் நிச்சயம் தேவை
ஒரு பெண்ணே இன்னுமொரு பெண்ணுக்கான முதல் பாதுகாப்பாக இருக்க முடியும் இது யதார்த்த உண்மை ஆகவேதான் பெண்களைக் கொண்ட தலைமைத்துவம் அரசியல் ரீதியாக தேவைப்படுகிறது
அதுமட்டுமல்லாது பெண்களின் கல்வி, தொழில், சமூக அங்கீகாரம், குடும்ப நிலையை மேம்படுத்தவும், பால்நிலை சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், பெண்களாலும் ஒரு சமூக மாற்றத்தை கொண்டு வரவும், உள்ளுர் அரசியல் முதல் தேசிய பாராளுமன்றம் வரை பெண்களின் தலைமைத்துவமும் அரசியல் பங்கேற்பும் தேவையாக உள்ளது
2.பங்கேற்பதற்கான தடைகள்:
பெண்கள் அனைவருக்குமே ஆண்களுக்கு சரி நிகரான சமூக கண்ணோட்டம் இருக்கிறது தொழில், கலை, கலாச்சாரம், அரசியல், உட்பட பண்முகத் தலைமைத்துவம் போன்றவற்றை செய்வதற்கு பெரும் விருப்பமும் திறமையும் இருக்கிறது ஆனால் அவற்றை அனுகுவதற்கும் செயற்படுத்துவதற்கும் கலாச்சார நெறிமுறைகள், பொருளாதார வளப் பற்றாக்குறை, பாலின அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு, வன்முறை மற்றும் பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களின் காரணமாக இவற்றை எல்லாம் பெண்களால் செயற்படுத்தவோ அனுபவிக்கவோ இயலாமல் போகிறது
ஒரு பெண் அரசியல் ரீதியாக செயற்படவோ அல்லது பெண்களின் தலைமத்துவ வழிகாட்டியாகவோ உருவாக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம் அதற்கு பொருளாதாரம் மற்றும் கலாச்சார விழுமியங்கள் தடையாக இருக்கலாம் அது ஒரு காரணம் இல்லை முதலில் அதை அடைவதற்கு ஆசைப்படுங்கள் நீங்கள் செயற்படுத்தவிருக்கும் செயற்பாடுகள் பற்றி அனுதினமும் சிந்தியுங்கள், உங்கள் திட்டங்களைப் பற்றி கற்றுக் கொள்ளுங்கள், உள்ளுர் கிராம அரசியலில் உள்ள தந்திரோபாய திட்டங்களை உங்கள் அன்றாட வேலைகளோடு அரசியல் பற்றிய புரிதல்களை வளர்த்துக் கொள்ளுங்கள்,
அரசியல் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்ளுங்கள்
மிக முக்கியமாக: உங்களது ஊருக்கு அல்லது மாவட்டங்களுக்கு வருகை தரும் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நட்பு ரீதியான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதன் மூலம் உங்களுடைய சிந்தனை,ஆற்றல், எதிர்பார்ப்பு, அரசியலில் உங்களுக்கு எவ்வளவு அறிவுத் திறமை உள்ளது என்பதை சிறுகச் சிறுக வெளிப்படுத்தும் போது எங்கோ கிடக்கும் வெற்றிடத்திற்கு ஏதோ ஒரு இடத்தில் கிடைக்கும் சந்தர்ப்பம் உங்களை அரசியலிலோ அல்லது பெண் தலைமைத்துவம் சார்ந்த விடயங்களிலோ உங்களை ஈர்த்துக் கொள்ளும்
ஆகவே: உலக அரங்கி வெற்றி கண்ட அல்லது வெற்றிக்காக போராடிய பெண்களின் வாழ்வியலை படியுங்கள் பெண்கள் அரசியல் தொடர்பாக அடிக்கடி பேசுங்கள், இணையத்தளங்கள் குழு விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள், அரசியல் தொடர்பாக சிந்தியுங்கள் அதில் பெண்களின் பங்கு என்ன என்பதை தேடுங்கள் அரசியல் மற்றும் பெண் தலைமைத்துவம் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்ளுங்கள் இவை எதிர்கால பெண்களின் அரசியல் வகிபாகத்திற்கு துணையாக நிற்கும்
அரசியல் அல்லது பெண்களின் தலைமைத்துவத்திற்கு வந்த பிறகு கற்றுக் கொள்வதை விட கற்றுத் தெளிந்து அரசியலின் நெழிவு சுழிவுகளை தெரிந்து வைத்து தயாராக இருக்கும் போது திடீரெனகிடைக்கும் சந்தர்ப்பத்தை பற்றிப் பிடித்து பயன் படுத்திக் கொள்ள முடியும்
சட்ட கட்டமைப்புகள்:
அரசியலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க பல நாடுகள் நிதிகளை ஒதுக்கீடு செய்து அவற்றை ஊக்குவித்து வருகின்றன அவற்றை தலைமை ஏற்றுள்ள பல நிறுவனங்கள் சரிவரச் செய்வதில்லை என்னும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றாலும் உங்கள் மாவட்டங்கள் உங்கள் கிராமங்கள் தோறும் செயற்படும் நிறுவனங்கள் பற்றி அவர்களின் வேலைத் திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டு அவர்களோடு இணைந்து பயணிக்கும் போது உங்கள் தலைமைத்துவத்தை இலகுவாக்கிக் கொள்ள முடியும் அங்கே அரசியல் ரீதியாக உங்களுக்கு வரும் நெருக்கடிகள் அச்சுறுத்தல்களை சமாளிப்பதந்கான மூலோபாயங்கள் கிடைக்கும்
.தலைமைத்துவத்தின் தாக்கம்:
தலைமைத்துவம் என்று வந்து விட்டடால் இங்கு ஆண்,பெண் என்ற பேதங்கள் எடுபடுவதில்லை ஆண்கள் எடுக்கும் முடிவுகள் சரியானது என்றும் பெண்கள் எடுக்கும் முடிவுகள் தவறானது என்றும் காலம் காலமாக உளவியல் ரீதியான தினிப்பை இந்த உலகம் கட்டவிழ்த்துள்ளது
அதை உடைக்க நினைத்த பெண்கள் நுணுக்கமான சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டு அரசியல் மற்றும் தலைமைத்துவத்திலிருந்து ஆரம்பத்திலிருந்தே வெளியேற்றப்பட்டுவிடுகிறார்கள் இந்த ஆபத்து உள்ளுர் கிராம அமைப்புகளிலிருந்து பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றங்கள், வரை உள்ளது
பெண் தலைவர்கள் எப்போதும் கூட்டு முயற்சியை உருவாக்க வேண்டும் உங்களுக்குப் பின்னால் வலுவான பெண்கள் அணியினை வைத்திருப்பது அவசியம் மிகவும் முக்கியமாக அரசியல் தலைமைத்துவம் என்று வந்துவிட்டால் தவறுகளை தட்டிக் கேட்கவும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும் தயங்கக் கூடாது இந்த செயற்பாடுகள் சமூகம் உங்களை நம்புவதற்கு ஏதுவான காரணியாக இருக்கம்
எல்லா பெண்களுக்கும் அமைவதில்லை
பாடசாலை மற்றும் கல்லூரி காலங்களில் சமூகத்தை எப்படி எல்லாம் மாற்ற வேண்டும் மக்களுக்கு பாரிய நண்மைகள் செய்ய வேண்டும் என்ற கனவுகளும்,ஆசைகளும், நிறைந்து காணப்படும் வருடங்கள் செல்லச் செல்ல பொருளாதாரம், குடும்பம், குழந்தைகள், என்று இளமைக்கால கனவுகள் மறைந்தே போய் விடுகிறது இது 90 வீதமான பெண்களுக்கு நடைபெறும் நிகழ்வுகள். மீதம் இருக்கும் பத்து வீதத்திலிருந்துதான் ஏதோ ஓரிருவர் அரசியல் ஆளுமைகளாகவும், பெண் தலைமைத்துவ நிர்வாகிகளாகவும், மிளிர்கிறார்கள் அவ்வாறு வெற்றியடைந்த பெண்ணியவாதிகளாக மாறுவதற்கு பொறுமை, விட்டுக் கொடுப்பு, தியாக மனப்பாண்மை, எது நடந்தாலும் பரவாயில்லை என்ற மன தைரியம், கண்டிப்பாக தேவைப்படுகிறது இவற்’றை எல்லாம் மீறி உங்கள் குடும்பம் தாய்தந்தை அல்லது கணவணின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது அப்போது நீங்கள் உங்கள் இலக்கை அடைவது மிகவும் இலகுவாக இருக்கும்
உலகளாவிய இயக்கங்கள்:
பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக இயங்கும் சர்வதேச இயக்கங்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புகளை வைத்திருங்கள் பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் உலகளவில் பெண்களின் அரசியல் ஈடுபாட்டை ஆதரிக்கவும் இவை வேலை செய்கின்றன இவர்களோடு சேர்ந்து இயங்கும் போது அரசியல் மற்றும் உலகம் தொடர்பான அறிவுகள் நிறையவே கிடைக்கும் முக்கியமாக மொழிப் புலமை என்பது அரசியலில் மிக முக்கியம் உங்களது கருத்தை வேறு ஒருவருக்கு நீங்கள் கூறுவது போல் முன்றாந்தர மொழி மாற்றம் செய்யக் கூடிய நபர் கூறமாட்டார் ஆகவே மொழிப் புலமை,சமூக ஊடகங்களை செயற்படுத்தும் அறிவு, பிரதான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடனான சுமூகமான நட்புறவு, போன்றவை அரசியலில் நிலைத்து நிற்கவும் வெற்றி காண்பதற்கும் துணை புரிகிறது.
அதிகளவான பெண்களுக்கு அரசியல் மற்றும் பெண் தலைமை ஏற்கும் திறமகள் இருந்தாலும் நமக்கு ஏன் இதெல்லாம் என்று ஒதுங்கி நிற்பதும் எதிர்கால பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும் இந்த சிந்தனையும் ஒரு ஆபத்தான விடயம்
முடிவுரை
பெண்களின் தலைமைத்துவம் மற்றும் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பது நீதிக்கான ஒரு விஷயம் மட்டுமல்ல நிலையான வளர்ச்சி மற்றும் நெகிழ்ச்சியான சமூகங்களை அடைவதற்கு அவசியமானது.
பெண்களின் குரல் மற்றும் பிரதிநிதித்துவத்தை ஆதரிப்பது மிகவும் சமமான மற்றும் பயனுள்ள நிர்வாகத்திற்கு வழிவகுக்கும். ஏனெனில் பெண்கள் இயற்கையாகவே பன்முக ஆளுமைத் திறமைகள் கொண்டவர்கள் அவர்களை குழந்தை பெற்றுக் கொள்ளவும் குடும்பத்தை மட்டுமே வழி நடத்த தகுதியானவர்கள் என்று தவறான கண்ணோட்டத்தில் குறுகிய வட்டத்திற்கு அடைக்கப்பட்டுள்ளார்கள் திருமணம், குழந்தை பெறுவது, என்பது இயற்கை அது சாதாரண நிகழ்வு அதையும் மீறி அவர்களிடம் பரந்து விரிந்த சிந்தனைகளும் திறமைகளும் நிறைவே இருக்கிறது
யாரோ ஒருவர் உங்களை தட்டிக் கொடுப்பார் அடையாளப் படுத்துவார் என்று நினைத்து எங்கோர் மூலையில் முடங்கியிருப்பது பெண்களின் பெருந் தோல்வி ஒரு கூட்டத்தில் உங்கள் கைகளை உயர்த்தினால் தான் நீங்கள் யார் என்பதை அடையாளப் படுத்த முடியும் பெண்களின் தலைமைத்துவத்தை ஏற்கவும் அரசியலில் பங்கேற்பாளராக மாறவும் உங்கள் கைகளை உயர்த்தி முன்னே வாருங்கள் பெண்களின் பரந்து விரிந்த திறமைகளுக்கும் ஆளுமைகளுக்கு எங்கோர் ஓர் இடம் காத்துக் கிடக்கிறது
நன்றி ஜெகன் ஊடகவியலாளர்