Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் ஸ்தல வரலாறு-மறோட்சவ சிறப்பு வெளியீடு

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அகோர விகார மகாமாரி ஸ்ரீசெல்வமுத்து மாரியன்னன் ஆலயத்தில் மறோட்சவத் திருவிழா எதிர...

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அகோர விகார மகாமாரி ஸ்ரீசெல்வமுத்து மாரியன்னன் ஆலயத்தில் மறோட்சவத் திருவிழா எதிர்வரும் 5-08-2024 அன்று மிகவும் பக்திபூர்வமாக  ஆரம்பிக்கப்பட உள்ளது அதனை சிறப்பிக்கும் முகமாக  அம்பிகையின் பூர்வீக வரலாறு வரலாற்று ஆய்வுகளுடன் தரப்படுகிறது  

அகோர விகார மகாமாரி அம்மன்

ஒரே மூர்த்தம் மூன்று சக்திகள் சக்திகள் கொண்டு  அகோர விகார மகாமாரி அம்மனாக  நானாட்டான் பிரதேசத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரிந்து வருகிறாள்  உலக சைவர்கள் மற்றும் இந்துக்கள் இதுவரை தெரிந்ததும் வழிபடுவதும் 108 அம்மன் சக்திகளே. ஆனால் 109வது  அம்மனாக எழுந்தருளி அருளாசி புரிவதும் வரலாற்றுக்குப் புகழ் சேர்ப்பதுமாக வீற்றிருப்பது மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயமாகும் 

இந்த அகோர விகார மகாமாரி அம்பிகைக்கும் மிகப் பழமையான வரலாறுகள் உள்ளது   வரலாற்றுக் காலத்தில் மன்னார் மாவட்டத்தில் மாந்தை பிரதேசத்தைப் போலவே சகல விதத்திலும் எழுச்சியுடன் காணப்பட்டது நானாட்டான் பிதேசம் இந்த நானாட்டான் பிரதேசமே முன் நாளில்  அல்லிராணி ஆட்சியின் தலைநகரம் ஆகும்  

இன்று நானாட்டான் பிரதேசத்தில் செல்வமுத்து மாரியம்மனாக அருள் புரிந்தாலும் பழமை மிகு நாளில் "அகோர விகார மகாமாரி" அம்மனாக நானாட்டான்   இராசமடுப் பகுதில் இருந்து அருள்பாலித்திருக்கிறாள் 

சம்பவத் திரட்டு

நானாட்டான் பிரதேசத்தில் அம்பிகை ஆலயம் ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து இன்றுவரை நடந்த சம்பவங்கள் அம்பிகையின் திருவிளையாடல்கள் தரிசனங்கள் அம்பிகை பற்றிய பல உண்மைகளை ஆலயம் சிறு புற்றாகவும் குடிசையாகவும் இருந்த 19ம்  நூற்றாண்டு காலத்திலிருந்து ஆலயத்தை பராமரித்து வந்த ஆலய பரிபாலன சபையினரால் சம்பவத் திரட்டாக தொகுக்கப் பட்டுள்ளது அப்படி பல ஆண்டுகள் அம்பிகை ஆலய பரிபாலன சபை நிர்வாகியாக தொண்டாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருவாளர் சி.சின்னையா அவர்கள் எழுதிய சம்பவத் திரட்டில் உள்ள  சம்பவங்களை திரட்டியும் அல்லி அரண்மனை அமைந்திருந்த இராசமடு தொடர்பாக இலக்கிய நூல்கள் மூலமாக ஆய்வு செய்து இந்த  தொகுப்பு தரப்படுகிறது  

மேலும் மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் என்னும்  அல்லிராணியின் அரன்மணைப் பகுதி அமைந்திருந்தது தொடடர்டபாக விரிவாக கூறப்பட்டுள்ளது  

அகோர விகார மகாமாரி அம்மன் ஆலயம் (இராசமடு)

நானாட்டான் பிரதேசத்திலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் மேற்கு பக்கமாக அமைந்துள்ளது இராசமடுக் கிராமம் மக்கள் குடிகள் அரிதாகி முன்பு வனப் பிரதேசமாகவே  காணப்பட்டது 

நானாட்டான் இராசமடுப் பகுதியில் பாண்டியர் தலைநகராக இருந்த போது  ‘அகோர விகார மகாமாரி’ என்னும் ஒரு மூர்த்தத்தில் மூன்று சக்திகள் கொண்ட அம்மன் ஆலயம் பாண்டியரின் அரண்மனை சுற்று வட்டாரத்தில் பாரிய ஆலயமாக இருந்துள்ளது.

அருள்மிகு ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன்(மூலமூர்த்தம்)

முன்னைய காலத்தில் அந்நியர்களின் ஆதிக்கத்தால்  ஆலய தர்மகர்த்தாக்கள் தெய்வ விக்கிரகங்களைப் பாதுகாப்பதற்காக  நிலங்களை  தோண்டி புதைத்தும் கிணறுகள் குளங்களில்  போட்டு மூடியும் அந்நியர் விக்கிரகங்களை கவர்ந்து சென்று விடாமலும்  உடைத்து விடாமலும் பாதுகாத்துள்ளனர். இராசமடுப் பகுதியில்  அம்பிகை ஆலயம் இருந்த போதும்  இவ்வாறு நடைபெற்றுள்ளது 

புராதனம் 

அப்படி  பல அரசர்களின் பின் இறுதியாக அம்பிகையை ஆதரித்தவர் சிறி கணபதி ஆவார் இவரது காலத்திலேயே ஆலயங்கள் ஆலயங்களுக்கு அழிவு வரவே . உடனே ஆலயத்தை விட்டு அம்பிகையின் சக்தி வாய்ந்த விக்கிரகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு இன்றைய அம்பிகை அமைந்திருக்கும் நானாட்டான் பிரதேசத்திற்கு  வந்து வீடொன்றில் மறைந்திருந்த போது அந்நியர்கள் இங்கும் சிலையை கவர்ந்து செல்ல வருகிறார்கள் என்று அம்பிகை சிறிகணபதியின் கனவில் கூறியதும் வீட்டின் நில அறையினுள் அம்பிகையை வைத்து மூடிவிட்டார்  அதன் பின் அவ்விடம் வந்த அந்நியரால் அம்பிகையின் விக்கிரகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை காலங்கள் பல உருண்டோடி விட்டது  ஆனால் அப்பகுதியிலேயே தற்போது ஆலயம் அமையப் பெற்றுள்ளது 

ஐதீகம்  

அகோர விகார மகாமாரி அம்மனின் சிலை தற்பொழுது ஆலயம் அமைந்திருக்கும் உள் வீதி மூலஸ்தானத்தினருகில் நிலத்தடியில் இருப்பதாக ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் சம்பவத்திரட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு  ஆலய நிர்வாகத்தினரும் நானாட்டான் கிராமத்து சைவ நன் மக்களும் உறுதியும் நம்மிக்கையும் கொண்டுள்ளனர்

அம்பிகை எழுந்தருளுதல் 

தற்பொழுது அம்பிகையின் ஆலயத்திற்கு நேர் எதிரே குடியிருந்த சண்முகம் என்னும் அடியவர் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தற்பொழுது அம்பாளின் மூலஸ்தானம் அமைந்திருக்கும் இடத்தினருகில் அமைந்திருந்த வியாய மரத்தடியில் சிறு கருங்கல் ஒன்றை வைத்து வழிபாடாற்றி வந்தார். பின் அந்த வியாய மரரத்தடியில் நாக பாம்பு வந்து போவதை கண்ட அடியவர்கள் சுற்றுப்புரத்தைத் துப்பரவாக்கி சூலாயுதம காளிஅம்மன் படங்களை வைத்து வணங்கி வந்துள்ளனர்.

மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்னால் அமைக்கப் பட்டிருக்கும் சிறு குடிசையும் மணிக்கூட்டுக் கோபுரமும் 1958-1963 காலப்பகுதியில் கட்டப்பட்டது. அதற்கு முன் குடிசை இருக்கும் இடத்தில் அமைந்திருந்த வியாய மரத்தடியில் அம்பிகையை கருங்கல்லாக வைத்து வழிபட்டனர். குறித்த வியாய மரமானது குடிசை அமைக்கப் பட்ட பின்னர் 1958லிருந்து 1965 இடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் விழுந்து விட்டதாக சம்பவ ஏட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆலயம் அமைக்கும் முதல் முயற்சி(1942)   

மரத்தடியில் கல்லுருவில் அம்பாளை வழிபாடாற்றி வந்த நானாட்டான் கிராமத்து சைவ மக்கள்  வெள்ளி செவ்வாய் கிழமைகளில் பொங்கல் பொங்கி படையல் வைத்து வழிபடுவது பல வருடங்களாக தொடந்து கொண்டிருந்தது. அம்பிகையை வணங்கி செல்லும் போது நினைத்த காரியம் கை கூடுவதனால் அம்பாளின் மீது அடியவர்களுக்கு பக்தியும் நம்பிக்கையும் அதிகமானது. யாழ்ப்பாணத்தை வேர்ந்த அரச அலுவலர்களின் ஆன்மீக தாகத்தினைத் தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக நானாட்டான் மத்தியில் அம்பிகை ஆலயம் இருந்தது. 

காரியாதிகாரி ஊழியர்கள்

எனவே அன்றைய காலத்தில் நானாட்டான் காரியாதிகாரி அலுவலக ஊழியர்கள் அரசாங்க நெல் ஆலை முகாமையாளர் திரு.சீனிவாசகம் எழுதுவினைஞர் சி.சின்னையா கார்த்திகேசு இரத்தினம் ஆசாரி ஆயுர்வேத வைத்தியர் இரட்ணசிங்கம் வர்த்தகர் பொன்னம்பலம் பொ.அம்மாசி திரு.தளைய சிங்கம் கணபதிப்பிள்ளை மற்றும் ஊர் பிரமுகர்கள் கூடி அம்பிகைக்கு ஆலயம் அமைப்பதற்காக 1942ம் ஆண்டு அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தனர். நிர்வாக ஒழுங்கிண்மையால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு முதல் முயற்சி தோல்வி கண்டது.

இரண்டாவது முயற்சிப் பலிதம்

அம்பாளின் அருளாசி பிரதேசம் கடந்தும் வியாபிக்கத் தொடங்கியதால் நிரந்தர ஆலயம் ஒன்றிற்கு வரும் பக்தர்கள் கூட்டம் போல் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் வந்து வணங்கத் தொடங்கினார்கள். அத்துடன் யாழ்ப்பாணத்து அன்பர்களின் சைவப் பற்றுக்கள் காரணமாக நானாட்டான் காரியாதிகாரி செயலக அலுவலர்கள நெல் ஆலை ஊழியர்கள நானாட்டான் சைவ மக்களை இணைத்து ‘நானாட்டான் சைவ மகா சபை’ என்னும் அமைப்பை உருவாக்கி விண்ணப்பித்ததின் பெயரில் தற்போது புதிய ஆலயம் இருக்கும் இடத்தில்  P.P.A 1951 சட்டத்தின் பிரகாரம் காணி வழங்கப் பட்டது.

ஆலயத்தின் முதல் தோற்றம்

வழங்கப் பட்ட காணியில் தற்போது மணிக்கூட்டு கோபுரத்திற்கும் வைரவர் ஆலயத்திற்கும் மத்தியில் நேர் மேற்கே சிறிய ஓலைக் குடிசை அமைத்து அதற்குள் (4க்கு4)அளவில் மண்ணினால் குறுமண்டபம் கட்டி அதற்குள் விநாயகர் பத்திரகாளி முருகன் படங்களையும் வடமேல் மூலையில் நாகதம்பிரானையும  நேர்கிழக்கே வைரவரையும வைத்து வழிபடப்பட்டது. இந்த ஆலயத்தின் அர்ச்சகர்களாக திரு.ஆ.தளயசிங்கம் அவர்களும் இதிரு.கணபதிப்பிள்ளை அவர்களும் கடமையாற்றினார்கள்.ஆலயத்தினுள் இருப்பது காளிகாம்பாள் என்றாலும் பொங்கல் பொங்கி படையல் வைத்து பூசை செய்வது வழமையாக இருந்தது.


நிரந்தர கட்டிடம் அமைத்தல்

காலத்திற்குக் காலம் அம்பிகையின் நாமங்களும் அருள்பாலிக்கும் தன்மைகளும் தோற்றங்களும் மாற்றமடைந்து வந்திருப்பதை அம்பிகையின் வரலாறுகள் மூலம் தெளிவாகின்றது. புராதன காலந் தொட்டு செல்வச் செழிப்போடு செல்வத்தின் அதிபதியாக அருளாசி புரிந்தவள் இன்று ஏழைகள் நடுவில் எழுந்தருளியிருப்பது பக்தர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அம்பிகையின் அருள் ஒவ்வொரு அடியவரையும் தாமாக முன் வந்து ஆன்மீகச் சேவை செய்யத் தூண்டியதன் பயனாக அம்பிகைக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க ஆலய நிர்வாகம் முடிவு செய்தது.


திருப்பணிச் சபை

1958ம் ஆண்டு அன்றைய நானாட்டான் காரியாதிகாரி திரு.மாணிக்கம் நடராஜர் தலைமையில் ஊர்ப் பிரமுகர்கள் ஒன்று கூடி அம்பிகைக்கான திருப்பணிச் சபையை ஆரம்பித்து 1963 ம் ஆண்டு செப்டம்பர் 16ந் திகதி யாழ்ப்பாணம் இராமகிருஷ்ண ஆசாரியால் நிலையம் வகுக்கப்பட்டு தொடச்சியான திருப்பணிகள் நண்கொடைகள் மூலம் நிதி வசூலிக்கப்பட்டு மூலஸ்தானம அர்த்தமண்டபம் மகாமண்டபம் மணிக்கூட்டுக் கோபுரம போன்றவை கட்டி முடிக்கப்பட்டது.

மஹோற்சவத் திருவிழா

புராதனக் காலந் தொட்டு பல தசாப்தங்களுக்கு முன் பலவாறு தன்னருளை வழங்கியிருந்தாலும் ஏகப்பட்ட இடர்பாடுகளைக் கடந்து நானாட்டான் பிரதேசத்தில் ஸ்ரீசெல்வமுத்துமாரியம்மனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாள். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அலங்கார உற்சவமாக வருடா வருடம் நடைபெற்றாலும் விநாயர் முருகன சண்டேஸ்வரி நவக்கிரகம் போன்ற  தெய்வங்களுக்கான ஆலயங்கள் கட்டப்படவில்லை 2-2-1977ல் விநாயகப் பெருமானுக்கான ஆலயமும் 8-06-1979 ல் முருகப் பெருமானுக்கான ஆலயமும் கட்டி முடிக்கப்பட்டு மஹோற்சவத் திருவிழா செய்வதற்காக 19-12-1982ல் பெரிய பண்டிவிரிச்சான் வனப்பகுதியில் இருந்து கொடி மரத்திற்கென திருக்கொண்டல் மரம் எடுத்து வரப்பட்டது.

முதலாவது கும்பாபிஷேகம்

ஒரு ஆலயம் அமைத்து அதற்கான ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து மூன்று காலப் பூசையுடன் நிவந்தனங்கள் செய்வது என்பது சாதாரன விடயமல்ல நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக மண்ணுக்குள் அஞ்சாத வாசம் செய்த அம்பிகை பூசைககள் வேத மந்திரங்களின்றி இழந்துவிட்ட தனது சக்திகளை பெறுவதற்கு வேத ஆகம நெறிப்படி கும்பாபிஷேகம் செய்யப்பட்டால் தான் அது முழுமையான ஆலயத்தின் தன்மையினைப் பெறும் அம்பிகைக்கான கும்பாபிஷேக ஒழுங்குகள் செய்யப்பட்டது

 அதன்பிரகாரம் 21-06-1968 சைவ ஆகம விதிப்படி பிரம்ஸ்ரீ சபாரெத்திண குருக்கள், கு.காமாட்சி குருக்கள், சி.முத்துக்குமாரசாமி குருக்கள், மணி ஐயர், ஸ்ரீ சிவசர்மா, சிவசாமி குருக்கள், போன்ற சிவாச்சரியார்களின் தலைமையில் மேள தாள வாத்தியங்கள் சகிதம் யாக பூசையுடன் திருவிழா ஆரம்பமாகி 22-06-1968 மாலை நான்கு மணியளவில் நானாட்டான் சந்தியிலிருந்து நூதன மூர்த்தி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு எழுந்தருளி மூர்த்தம் 24-06-1968 இரவு 12 மணி தொடக்கம் 25-06-1968 காலை 10 மணி வரை முருங்கனிலிருந்து பள்ளங்கோட்டை நானாட்டான மோட்டக்கடை நாகசெட்டி ஒலிமடு போன்ற கிராமங்களினூடாக கோவிலை வந்து அடைந்து. 


26-06-1968 காலை 8.30மணி முதல் அம்பிகைக்கான எண்ணெய்க்காப்பு சாத்தப்பட்டு 27-06-1968 நீலக வருடம் ஆனி மாதம் 14ந் திகதி வியாழக்கிழமை புனர்பூச நட்சத்திரம் சிங்க லக்கின சுப வேளையில் மானிடப் பிறவிகளின் மகத்தான நாள் காலை சரியாக 9.30.மணியளவில் கும்பம் வீதி பிரதட்சணம் வந்து 9.30.மணிக்கு மூலஸ்தான பிரவேசம் சரியாக காலை 10.மணியளவில் அம்பிகைக்காக வேத மந்திரங்களால் ஆவாகணம் செய்யப்பட்ட கங்கையைப் போன்ற புனித நீரால் அம்பிகை மீது கும்பாபிஷேகம் செய்யப்பட்டது அவ்வேளையில் உச்சஸ்தாயில் நாத ஒலிகளும் பக்தர்களின் அரோகரா கோஷமும்  அம்பிகை மனதை நிச்சயம் குளிர வைத்திருக்கும்.

முதலாவது மஹோற்சவம்

இரண்டாவது கும்பாபிஷேகம் முடிந்து இனிவரும் காலங்களில் அலங்கார உற்சவங்களைத் தவிர்த்து  மஹோற்சவம் செய்ய வேண்டி ஏற்பாடுகள் நடைபெற்றது  23-08-1982 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சோ.வாகீஸ்வரக் குருக்கள் தலைமையில் மஹோற்சவம் ஏற்பாடாகியது.

கொடிச்சீலை ஊர்வலம்

23-08-1983 காலை 4.00 மணியளவில் திருக்கேதீஸ்வரநாதர் ஆலயத்தில் காலை 5.30 பூசையில் வைத்து திருக்கேதீஸ்வரத்திலிருந்து ஊர்வலமாக அம்பாள் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு காலை 10.51 மணி நிமிடத்திற்கு கொடியேற்றப்பட்டது.

இனக்கலவரத்தால்  மஹோற்சவம் தடைப்படல்

அம்பிகையின் ஆலயம் மெது மெதுவாக தனது பழைய நிலையினை அடைந்து கொண்டிருந்த காலப்பகுதி இரண்டாவது மஹோற்சவத்திற்கான ஏற்பாடுகள் முடிவுற்ற நிலையில் 14-8-1983 யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. அம்பிகை ஆலயத்தின்  மஹோற்சவ குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் யாழ்ப்பாணத்திலிருந்தே வருகை தர வேண்டும் அவர்கள் வர முடியாதபடியால் இரண்டாவது மஹோற்சவம் தடைப்பட்டது.

45 நாட்கள் ஆலயம் பூசையின்றிப் பூட்டப்படல்

1985ம் வருடம் இனக்கலவரம் உச்சம் பெற்றிருந்த வேளை அம்பிகை ஆலயத்தின் நித்திய பூசைகளுக்கோ திருவிழாக்களுக்கோ குருக்கள் சிவாச்சாரியார்கள் முதலானோர் யாழ்ப்பாணத்திலிருந்தே அழைப்பதுண்டு இனக்கலவரத்தால் பாரிய உயிர்சேதங்களும் இடம் பெயர்வுகளும் ஏற்பட்டதனால் அம்பிகை ஆலயத்தில் அர்ச்சகராக கடமை புரிந்த சிவாச்சாரியார் தனது குடும்பத்தினரைப் பார்க்க யாழ் சென்றவர் திரும்ப முடியாத நிலையில் 45 நாட்கள்  கிட்டத்தட்ட ஒரு மண்டலம் அம்பிகை ஆலயம் பூசைகளின்றி பூட்டப்பட்டிருந்தது.

ஆலயத்தின் இறுதித் திருவிழாவும் ஆலயம் சேதமுறலும்

யுத்த அனர்த்தத்தால் கோவில் பூசை தடைப்படுவதும் பிராய்ச்சித்த அபிஷேகம் செய்து கோவில் திறப்பதும் வழமையாகிப் போனது. 6-6-1990ம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவே அம்பிகை ஆலயத்தின் இறுதித் திருவிழா அதன் பின் பாரிய அளவில் யுத்தம் வெடித்ததால் மக்கள் இடம் பெயர்ந்து சிலர் உள்நாட்டு ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பலர் இந்தியாவிற்கும் அகதிகளாக சென்றதும் நானாட்டான் பிரதேசமும்அம்பாள் ஆலயமும் மக்கள் நடமாட்டமின்றி வெறுமையானது.  13-06-1990ல் ஆலயம் அமைந்திருந்த இடத்தச் சுற்றி யுத்தம் நடந்தபடியால் ஆலயம் முற்றாக சேதமடைந்தது.

ஆலயம் மீண்டும் புதுப் பொலிவுறல்

1990களின் பிற்பகுதியில் அகதிகளாக சென்ற சைவ மக்கள் மீண்டும் நானாட்டானில் குடியேறிய பின் அம்பாள் ஆலயத்தை புதுப்பிக்க வேண்டி ஆலய பரிபாலன சபையை மீள் உருவாக்கம் செய்து திருப்பணிச்சபை ஆரம்பித்து ஆலயத்தை புனருத்தாரணம் செய்ய வேண்டி 02-03-2000ம் ஆண்டில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு அரசினால் வழங்கப்பட்ட நிதி பொது மக்கள் உபயம் அன்பளிப்புகள் சைவ மக்களின் பாரிய பங்களிப்புடன் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு புதிதாக நவக்கிரக கோவில் முன் மண்டபம் புதிய தேர் என்பவற்றுடன் அழகுற அமைக்கப்பட்டு 30-08-2001ல் மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடந்தேறியது.

கடந்த 2001  அம்பிகை ஆஈலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திலிருந்து  மிகவும் சிறந்த முறையில் மஹோட்சவத் திருவிழாக்களும் பூஜைகளும் மிகவும் சப்பாக நடைபெற்று  வந்து கொண்டிருந்த போது  அம்பிகைக்கான இராஜ கோபுரம் அமைப்பதற்கான பணிகள் ஆலய நிர்வாகத்தினராலும் பொது மக்களினாலும் முன்னெடுக்கப்படடது 

பஞ்சதள இராஜகோபுரம் 

அகோர விகார மகாமாரி சிறி செல்வமுத்துமாரியம்மன் ஆலயம் இராஜகோபுரம் அடிக்கல் நடும் நிகழ்வு சம்பர் 12ம் திகதி மிகச்சிறப்பாக நடந்தேறியது 


மேலும் அம்பிகை ஆலய மஹோட்சவத்தில்  பால் செம்பு காவடி போன்றவை இராசமடு சாளம்பன் பிள்ளையார் ஆலயத்திலிருந்து எடுத்து வரப்படும் அத்துடன் வேட்டைத்திருவிழா  ஆண்டார் செட்டிவெளி முனியப்பர் ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெறுவதுண்டு 

அம்பிகைக்கான இராஜகோபுர திருப்பணி வேலைகள் பொருளாதாரப்பிரச்சனைகள் மத்தியிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

No comments