Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மக்கள் இழந்த மாபெரும் அபிவிருத்திச் சொத்து பேசாலை துறைமுகம்

 மன்னார் மாவட்டமும் மாவட்டத்தைச் சார்ந்த மக்களும் எப்படியாவது பொருளாதாரத்தில் மீண்டுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பல நூற...

 மன்னார் மாவட்டமும் மாவட்டத்தைச் சார்ந்த மக்களும் எப்படியாவது பொருளாதாரத்தில் மீண்டுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பல நூறு வருடங்களாக போராடியும் அதற்கு சாத்தியம் இல்லாமலேயே போகின்றது மன்னார் மாவட்டத்து மக்களிடம் திறமை இருக்கிறது நல்ல உழைப்பு இருக்கிறது என்றாலும் அவர்களால் மீள முடியவில்லை

என்ன காரணம் என்று கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், உட்பட பலரிடம் கேட்டாலும் பதில் இல்லை. அவர்களை சுயமாக சிந்திப்பதை, வாழ்வதை ஏதோ ஒரு சக்தி தடுக்கிறது என்று தெரிகிறது அந்த சக்தி எது என்பதை கல்வியாளர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்து சுயமாக சிந்தித்து செயற்பட ஆரம்பித்தால் மன்னார் மாவட்டத்தின் எழுச்சியும், உயர்ச்சியும், எட்டமுடியாத உயரத்தை விரைவாக அடைந்து விடும்

அப்படி சுயமான சிந்தனை இல்லாததின் விளைவால் பரிபோன ஒரு தங்கப் புதையல் அபிவிருத்திதான் மன்னார் மாவட்டத்திற்கு வந்த பேசாலை துறைமுகம்

இதை தற்போது எழுதுவதற்கு காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் காரைக்கால் பகுதிக்கு படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மன்னார் மாவட்ட மக்களின் மனக் குமுறல்தான் காரணம்

2018 ஆண்டளவில் 5ஆயிரத்து 267 மில்லியன் ரூபா செலவில் பேசாலையில் துறைமுகம் அமைப்பதற்கு அரசு தீர்மானித்திருந்தது

இவற்றை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையில் அமைப்பதற்காக அரசும் அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்ட போது பேசாலைப் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பிய சிலர் இன்று காரைக்கால் காங்கேசன்துறைக்கும் கப்பல் சேவை விடப்படுவதை நினைத்து கவலையடைந்துள்ளார்கள் சிலர் நேரடியாகவே தெரிவித்தும் உள்ளார்கள்

யாழ்ப்பாணம், காங்கேசன் துறையிலிருந்து இந்தியா காரைக்கால் இடையில் கப்பல் சேவை நடாத்துவதால் யாழ் மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே நண்மை

காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் பகுதிக்கு நான்கு மணித்தியாலத்தில் செல்ல முடியும். இந்தப் பயணத்திற்காக ஒருவர் இலங்கை நாணயப்படி முப்பது ஆயிரம் ரூபாய் தான் கட்ட வேண்டும் போவதற்கு 15,000 ரூபாய் வருவதற்கு 15,000 ஒருவர் 100 கிலோ பொருட்களை கொண்டுவர முடியும் இங்கிருந்தும் 100 கிலோ பொருட்களை கொண்டு போக முடியும் என்று உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது

இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் வடபகுதியில் உள்ளவர்கள் இனி நேரடியாக தமிழ்நாட்டுக்கு சென்று பொருட்களைக்  குறைந்த செலவில் கொண்டு வர முடியும் விமானத்தில் செல்வதை விட இது குறைந்த செலவு. இது வடக்கில் உள்ள ஏனைய மாவட்டத்தை சார்ந்தவர்களுக்குப் பொருந்தாது

குறிப்பாக மன்னார், வவுனியா, வாழ் வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இந்த கப்பல் சேவை பொருத்தமற்றது

நாட்கள், நேரங்கள், செலவழியும் கொண்டு வரும் அல்லது கொண்டு செல்லும் பொருட்களுக்கான ஏற்றி இறக்கும் வாகனக் கூலி இதை எல்லாம் பார்த்தால் வியாபாரிகள் கொழும்பில் போய் பொருட்கள் கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள், அல்லது வீட்டுக்கு தேவையான பொருட்களை கொழும்பில் கொள்வனவு செய்து கொள்ளலாம் என்பது ஒரு சிலரின் கருத்து

உண்மையில் ஆகப் பின்தங்கிய நிலையில் இருக்கும் மன்னார் மீள் எழுச்சி பெற வேண்டுமானால் இந்த கப்பல் போக்குவரத்து தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரத்திற்குச் செல்ல வேண்டும் அப்போதுதான் மன்னார் மாவட்டத்தின் படி நிலை வளர்ச்சியை காண முடியும்

மிகப்பழங்காலத்தில் மன்னார் ஒரு இயற்கைத் தறைமுகம், உலக வாணிப வர்த்தக மையமாக விளங்கி இலங்கை என்னும் ஒரு நாடு உருவாக முன் ஈழத்தமிழர்களை உலகின் முன் அடையாளப்படுத்தியது மன்னார் மாவட்டம் என்றால் அது மிகையாகாது

உலகிலேயே மன்னார் மாவட்டத்திற்கு மட்டும் தான் அதிகமான வரலாற்றுப் பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் மன்னாரின் துறைமுகச் சிறப்பு 
இப்படி புகழோடு இருந்த தேசத்திற்கு  அதனுடைய பழைய புகழை அடைய வேண்டும் என்று கடவுளால் அனுப்பட்ட பேசாலை துறைமுக அபிவிருத்தித் திட்டம் இல்லாமல் செய்யப்பட்டது

இந்த விடயம் தற்போது அமைதியாகி விட்டது ஆனால் 2015 தொடக்கம் 2019 வரை இழுபறி நிலையில் பிரச்சனையாக இருந்தது அந்த நேரத்தில் வந்த கொரோனா நோய்த்தொற்றாலும், பல எதிர்ப்பு காரணங்களாலும், துறைமுகம் மன்னார் மக்கள் கையிலிருந்து நழுவிச் சென்றது

பேசாலை துறைமுக ஆரம்பநிலை :-20015ம் ஆண்டளவில் மன்னாரில் ஒரு மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுவதுடன்  அதிகாரிகள் அதற்கான கள ஆய்வுகளை மேற்கொண்டு இறுதியில் பொருத்தமான இடமாக மன்னார், பேசாலையை தெரிவு செய்து அங்குள்ள மீனவர்கள், மீனவ சங்கங்கள், உரிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது  

2018ம் ஆண்டளவில் வட மாகாணத்தில் கடற்றொழில் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்துதல், நீர் உயிர்வாழ் உற்பத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியை, நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் வட மாகாண பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டு.  5ஆயிரத்து 267 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி கிராமிய, பொருளாதார தொடர்பான அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.


இந்த திட்டத்தின் நிர்மாணப்பணிகளுக்காக நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக அமைச்சரவை நிலையியல் பெறுகைக்குழு மற்றும் தொழில்நுட்பக்குழுவை நியமித்திருந்தது

இந்த விடயம் தொடர்பான செய்திகளை தற்போதும் அனைத்து இணையத்தளங்களிலும் காணக் கூடியதாக உள்ளது

பேசாலையில் துறைமுகம் அமைவது தொடர்பான சாதக, பாதக, பலன்கள் நீண்டகாலம் ஆராயப்பட்ட போதும் திடீரென பேசாலையில் துறைமுகம் அமைவது கிராமத்து மக்களுக்கு விருப்பம் இல்லை என்ற தகவல்கள் வெளியானது

ஆரம்பத்தில் துறைமுகம் வந்தால் நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும் தற்போது எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள் சம்பந்தப்பட்ட அமைச்சு, திணைக்களம், அதிகாரிகள், என்று எதிர்ப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு கட்டத்தில் பேசாலையில் துறைமுகம் தேவை இல்லை என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையம் பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவிற்கே நேரடிக் கடிதம் சென்றதாக தகவல்கள் உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் பலன் இல்லாமல் போனது இதற்காகவே பிரத்யேகமான இணையத்தளங்களும் உருவாக்கப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்றது

இந்த செயற்பாடுகள் எவரது பின்னணியில் இடம்பெறுகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று இதில் சம்பந்தப்பட்ட சிலர் தெரிவித்திருந்தார்கள்

இந்த பேசாலை துறைமுகத்தை எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுவது கரையோரங்களில் துறைமுகம் அமைந்தால் ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபட வெளியிடத்து மீனவர்கள் வருவார்கள், அதனால் ‘பாடு’ பறிபோகும்,நீர்கொழும்பு போன்ற பல பகுதியில் இருந்தும் வெளியிடத்தவர்கள் இங்கு வந்து குடியேறக் கூடும் இதனால் கலாச்சார சீரழிவுகள் ஏற்படும், துறைமுகத்தில் போதைவஸ்து பாவனைகள் அதிகரிக்கும், கடற்படை பரிசோதனை என்ற போர்வையில் மீனவர்களின் சுதந்திரம் பறிபோகும், இது போன்ற பல காரணங்கள் கூறப்பட்டு தேசத்திற்கான அபிவிருத்தி நிறுத்தப்பட்டிருந்தது

இந்த தகவல்கள் இந்த இணையத் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது CLICK HERE

சிங்கள மீனவர்கள் இங்கு வந்து குடியேறுவார்கள், பாடு பறிபோகும், போதை வஸ்துகள் பாவனை அதிகமாகும்,  சோதனை கெடுபிடிகள் அதிகமாகும், போன்ற விடயங்கள் எதிர்காலத்தில் நடைபெறும் என்னும் கற்பனை  இது ஒரு மனநோயின் வெளிப்பாடு இன்றைய நாள் நமக்கு நிரந்தம் இல்லாமல் இருக்கும் போது என்றோ ஒரு நாள் நடைபெறும் எனும் சந்தேக’ கற்பனையில் மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

சரி அதையும் தாண்டி இன்று மன்னார் பேசாலைப் பகுதியில் துறைமுகம் வரவில்லை மன்னார் கடல் வழியால் போதை வஸ்துக்கள் வரவில்லையா?  தற்போது கடற்படையினரின் சோதனைகள், பாஸ் நடைமுறைகள், இல்லாமல் அனைவருரும் தொழிலுக்குச் சென்று வருகிறார்களா? இந்திய மீனவர்களின் வருகை இல்லாமல் உள்ளதா?  எதிர்மறையான சிந்தனைகளாலும், சுயநல நோக்கங்களாலும் எமது எதிர்கால சந்ததிக்கு கடலையும், கட்டுமரங்களையும், வறண்ட பூமியை, மாத்திரம் விட்டு விட்டுப் போகப் போகிறோம் என்று மன்னாரில் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

எந்த ஒரு அபிவிருத்தியும் மன்னாருக்குள் நடைபெறக் கூடாது என்று தடுத்து நிறுத்தினால் மன்னார் எவ்வாறு பொருளாதாரத்தில் தன்னிறைவு காணும் மக்களோடு மக்களாக இருந்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் யார்? என்பதை  முதலில் மக்கள் அடையாளம் காணவேண்டும்

மன்னாருக்கு வந்த துறைமுகம் திருப்பி அனுப்பப்பட்டடுள்ளதால் அல்லது கிடைக்காமல் போனதால் பேசாலைக்கும் நண்மை இல்லை, எவருக்கும் நண்மை இல்லை ஆனால் இழப்பு என்பது ஒட்டு மொத்த மன்னார் மாவட்டத்துக்கு என்பதை பலர் இனி வருங்காலங்களில் உணர்வார்கள்

 பேசாலைத் துறைமுகம் தடைபட்டுப் போக உள்ளது தொடர்பாக அப்போதைய வடக்குமாகாண ஆளுநர்  சுரேன் ராகவன் அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது ‘அபிவிருத்திகள் என்பது மக்களுக்காக’ மக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த செயற்பாட்டையும் செய்யமாட்டோம் என்றார்.

இந்த துறைமுகத்திற்கான எதிர்ப்பை தூண்டிவிட்டவர்களுக்கு மூன்று வேளை நல்ல உணவு, வாகனம், நல்ல வீடு, நிம்மதியான உறக்கம்,  என்பன உள்ளது  ஆனால் அந்த எழை மீனவர்களின் வாழ்க்கை  அன்றாடம் தொழிலுக்குப் போய் வந்தால்தான் உணவு என்ற நிலையில் இன்றும் உள்ளார்கள்

ஒரு வேளை பேசாலை துறைமுகம் அமையப்பட்டிருந்தால் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் கப்பல் போல் பேசாலையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் பயணிகள் கப்பல் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது

இவ்வாறு ஒரு தங்கப் புதையல் அபிவிருத்தி மன்னார் மண்ணுக்கு இனி கிடைக்குமா? என்பது சந்தேகமே ஒரு சிலரின் நிராகரிப்பினால் மன்னார் மாவட்டம் முழுவது  அதன் சுய அபிவிருத்தியையும் எழுச்சியையும் இழந்துள்ளது 

என்றாலும் மன்னாருக்கு வந்த பாரிய அபிவிருத்தி திரும்பி சென்று விடக் கூடாது என்று முன்னாள் அமைச்சராக இருந்த ரிசாட் பதியுதீன் அவர்கள் குறித்த துறைமுகத்தை சிலாவத்துறைப் பகுதிக்கு மாற்றுவதற்கும் முயற்சிகள் எடுத்தார் அது பலன் இல்லாமல் போனது ஏனெனில் அது தென்கடல் என்ற படியால் அப்பகுதியில் மணல் அதிகமாக குவியும் பின் நாளில் பாதகத் தன்மையை ஏற்படுத்தும் என்ற கருத்துகளால் அவை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

பேசாலையிலோ அல்லது மன்னார் மாவட்டத்தில் எங்காவது ஒரு துறைமுகம் அமைந்தால் அல்லது தலைமன்னாரிலிருந்து ஒரு கப்பல் சேவை இராமேஸ்வரத்திற்குச் சென்று வந்தால் மன்னார் மாவட்ட மக்களுக்கு எவ்வளவு நண்மை கிடைக்கும், சுயசார்பு பொருளாதாரத்தில் மக்கள் எவ்வாறு முன்னேற்றம் அடைவார்கள், என்று அடுத்த பதிவுகளில் தொடரும்

உங்கள் வாழ்க்கைக்குள்ளும், உங்கள் சிந்தனைக்குள்ளும், எவரையும் நுழைய விடாதீர்கள், உங்களை கட்டுப்படுத்த எவருக்கும் அனுமதி வழங்காதீர்கள், இது உங்களுக்கான வாழ்வு, ‘உங்கள் குடும்பம் வறுமையில் கிடந்தாலும், பிரச்சனைகளில் சிக்கித் தவித்தாலும், கண்டும் காணாமல் போகும் சமூகத்தில் வாழ்கிறோம்’.

உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைசெய்யுங்கள் அடுத்தவரின் கட்டளையில் வாழ்ந்துப் பழகாதீர்கள் யாரேனும் உங்களுக்கு அதிகமான அறிவுரை கூறினால் அறிவுரை கூறுபவர்களுக்குத்தான் அதிக நண்மை உண்டு உங்களுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் நீங்களாக சிந்தியுங்கள் நீங்களாக செயற்படுங்கள்

பல கோடி ரூபா அபிவிருத்திகளை இலகுவாக வேண்டாம் என்று ஒதுக்கி விடலாம்
ஆனால் அதை மீண்டும் பெற முடியுமா? என்று சிந்திக்க வேண்டும்

இந்த செய்திகள் தொடர்பான சில இணையத் தளங்கள் https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1137http://ourpesalai.blogspot.com/2018/10/blog-post_12.html http://www.newmannar.lk/2018/10/400cores.html

No comments