Page Nav

HIDE

Breaking News:

latest

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பழங்கால மன்னார் சிறப்பு

மன்னார் மாவட்டம் பழங்காலத்தில் உலக பரப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிலமாகவும், செழிப்பும், வசதியும், மிக்க நகரமாக இருந்துள்ளதை இதிகாசங்க...

மன்னார் மாவட்டம் பழங்காலத்தில் உலக பரப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிலமாகவும், செழிப்பும், வசதியும், மிக்க நகரமாக இருந்துள்ளதை இதிகாசங்கள், புராணங்கள், தேவாரத் திருப்பதிகங்கள், சங்ககால இலக்கிய நூல்கள் வாயிலாகவும் அறிந்திருக்கின்றோம் 


வீடியோ மூலம் பார்க்க VIDEO

இன்றைய மன்னர் மாவட்டத்திற்கு முன்னைய நாளில் மாந்தை,மாதோட்டம், மன்னார் புரம், மணிபுரம், தாமிரபரணி தம்பபண்ணை, நாகநாடு, தப்ரோபேன், சிவபூமி, ஒளிநாடு, கற்பக நாடு, திருநாடு,  என்று பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது

‘மன்னார்’ என்பதற்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் தொல்காப்பியம் கூறுவது ‘கிடைக்காத பொருளும் கிடைக்கும்’ என்பதாம் அதாவது ‘இந்த மன்னார் என்கிற மாதோட்டத்திற்குச் சென்றால் அவரவர்க்கு தேவையான பொருட்களை நிச்சயம் பெற்றுக் கொண்டு வரலாம் என்பதாம்’ மன்னார் மாவட்டம் பழங்காலத்தில் இருந்த துறைமுக சிறப்பை குறிக்கிறது


அதற்கு ஏற்றாற் போல் மன்னார் மாவட்டத்தில் கடற்தொழில், விவசாயம், முத்துக் குளித்தல் காட்டு வளம், வேட்டைத் தொழில், குடிசைக் கைத் தொழில்கள், என்று வியாபாரம் இந்த மாவட்டத்து மக்கள் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்த நல்ல உழைப்பாளிகள் மக்களின் உழைப்பும் மாதோட்ட துறைமுகச் சிறப்புமே அந்த மக்களை மேன்மையாக வைத்திருந்தது

அது மட்டுமல்ல வியாபாரத்திற்காக மாதோட்டம் வரும் அராபியர்கள் உட்ப பல வெளிநாட்டவர்கள் மாந்தை மக்களிடம் தொழில் கற்றுச் சென்றுள்ளதாக சங்ககாலத்து இலக்கிய நூல்கள் கூறுகிறது இவ்வாறு மாதோட்டத்தின் பண்டைய தொழில் வளர்ச்சியை சொல்லிக் கொண்டே போகலாம்

மன்னார் மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாக இலங்கைத் தீவின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டமும், வடகிழக்கே முல்லைத்தீவு மாவட்டமும், கிழக்கே வவுனியா மாவட்டமும், தென்கிழக்கே அனுராதபுர மாவட்டமும், தெற்கே புத்தளம் மாவட்டமும், எல்லைகளாக அமைந்துள்ளன.


வீடியோ மூலம் பார்க்க :-மன்னாரில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை, மடு, போன்ற ஐந்து பிரதேச செயலகங்களைக் கொண்டு இதன் மக்கள் தொகை 2001ம் ஆண்டு கணக்கின் படி 151577 மேல் மக்கள் வாழ்கிறார்கள்

பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கள் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது அவை  இயற்கைப் பேரழிவுகள், மற்றும் வறுமை, பஞ்சம் போன்ற காரணங்களால் மக்கள் வாழ முடியாமல் தமிழ் நாடு உட்பட வெளி நாடுகளுக்கு குடி பெயர்ந்து இருக்கக் கூடும்

இவ்வாறு சிப்புற்றிருந்த மண்ணும் மக்களும் இன்று வறுமைக் கோட்டுக்குள் சிக்கித் தவித்து எவராலும் கண்டுகொள்ளப்படாமல்  இருப்பதற்குக் காரணம் என்ன?

மன்னர் மாவட்டத்தில் உள்ள மக்கள் நல்ல உழைப்பாளிகள், ஒவ்வொரு நாளும்  ஏதோ ஒரு புதிய முயற்சிகளை மேற்கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற கடுமையாக உழைத்த போதும் அவர்களால் மீள முடியவில்லை

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மன்னார் மாவட்டம் நம்பி இருந்த துறைமுக செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் பின்னர் மன்னாரின் வளர்ச்சி அதள பாதாளத்திற்குச் சென்றுள்ளது என்பதை உணர முடியும்

மன்னார் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் அதன் கரையோரப் பிரதேசங்கள் துறைமுக செயற்பாடுகளை கொண்டிருந்தாலும், அதன் வியாபார நடவடிக்கைகள் எப்போதும் மாந்தை, முசலி, மடு, நானாட்டான், போன்ற பெருநிலப் பரப்புகளில் சிறப்பான வியாபார பெரு நகரங்களாக இயங்கியதற்கான ஆதாரங்கள் உண்டு


இது வரை யாராலும் சொல்லப்படாத பாரிய பண்பாட்டு வியாபார பெரு நகரமாக நானாட்டான் மற்றும் கட்டுக்கரைப் பகுதி இருந்துள்ளது

இந்த கூற்றை 2016 ஆம் ஆண்டு தொல்லியல்துறை பேராசிரியர் க.புஷ்பரட்ணம் அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களோடு கட்டுக்கரை பகுதியில் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது

அகழ்வாய்வின் போது அங்கே கண்டெடக்கப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்கள், மட்பாண்டங்கள், கண்ணாடி துகள்கள், சுவாமி சிலைகள், குடியிருப்பு, மயானம், போன்றவற்றைக் கொண்டு இங்கு ஒரு பெரியதொரு வியாபார நகரம் இருந்ததை அவர் உறுதிப்படுத்துகிறார்.

மேலும் இங்கு காணப்பட்ட கூறிய ஆயுதங்கள், கற் கருவிகள் உட்பட பாவிதமான பொருட்களை வைத்து இங்கு பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்றும் கூறுகின்றார்.


இங்கு கற்கால மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது தமிழர் வரலாற்றிற்கு ஒரு மேலான சான்றாகும்  

உலக வர்த்தகத்திற்கும், கட்டுக்கரைக்கும், நேரடி தொடர்பு இருந்துள்ளது அதே போல் கட்டுக்கரைக்கும், அனுராதபுர வர்த்தகத்திற்கு, நேரடிம் தொடர்பு இருந்துள்ளது இது தொடர்பான விரிவான விளக்கம்  நீண்டதாக இருக்கும் ஆகவே ஆதாரத்திற்காக ஒரு சிலவற்றை பார்ப்போம்

இந்த தகவல்களை உறுதிப்படுத்த வேண்டுமானால் மன்னார், வங்காலை, அரிப்புத்துறை, அச்சங்குளம், விடத்தல் தீவு, மற்றும் மாந்தைப் பகுதிகளில் இருந்து மக்கள் குடியிருப்புகள் நோக்கி வரும் ஓடைகள் கட்டுக்கரை குளத்திற்கே வருகிறது


குறிப்பாக நானாட்டான், அச்சங்குளம் வழியாக வரும் ஓடை அருவியாற்றிற்கும், கட்டுக்கரைக்கும், பிரிந்து போகிறது இந்த ஓடைகள் முன்னைய நாளில் ஆழமானதாகவும் அகலமானதாகவும் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளாக துறைமுக வியாபார நடவடிக்கைகள் கைவிடப்பட்டதால் மழை, வெள்ளம், மண் அரிப்புகளால் மூடப்பட்டு பல இடங்களில் ஓடைகளின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு கிராமங்களும் வீதிகளும் அமைக்கப்பட்டுள்ளது

பேராசிரியர் குழு கட்டுக்கரையின் ஒரு பகுதியை மாத்திரமே ஆய்வு செய்தார்கள் கட்டுக்கரைக் குளத்தை சுற்றிலும் காணப்படும் பல தொல் பொருள் அடையாளங்களும் தமிழ் சிங்கள வரலாற்று மோதல்களுக்கு பல ஆதாரங்களை தமிழர் தரப்புக்கு வழங்க வல்லது

மேலும் நானாட்டான் பிரதேசத்தில் பண்டைய காலத்தில் தொழிற்சாலைகள் இருந்தமைக்கான ஒரு சில சான்றுகள் தற்போது வெளி வந்துள்ளது

இவை ஒழுங்கான ஆராய்ச்சிகள் இல்லாத காரணத்தினாலும் ஒழுங்கான தேடல்கள் இல்லாத காரணத்தினாலும் தமிழர்களின்  வரலாறுகள்  மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

2019 மன்னர் நறுவிலிக்குளம் பகுதியை ஆய்வு செய்த தொல்பொருள் திணைக்களம் அவ்விடத்தில் ஒரு துறைமுகம் இருந்ததையும் அநுராதபுர யுகத்து நாணயக் குற்றிகள் எடுத்து உறுதிப் படுத்தியது

2020 ஆம் ஆண்டு அளவில் நானாட்டான்  பிரதான சந்தி வடக்கு வீதிப் பகுதியில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டிய போது இரட்டை கயல் மீன் சின்னம் பொறித்த 2000 நாணயக் குற்றிகள் புதையலாக எடுக்கப்பட்டது குறித்த இடம் குளக்கரையை அண்மித்தே உள்ளது

இதே நானாட்டான் சந்தியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளங்கோட்டை என்னும் கிராமத்தின் குளத்தை அண்டிய பகுதியில்  கருங்கற்களினால் ஆன பாரியதொரு ஆட்டுக்கல் மற்றும் செங்கல் இடிபாடுகளும் காணப்படுகிறது


இவற்றைப் பார்க்கும் போது இங்கு ஒரு எண்ணை தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் வரை ஏராளமான இலுப்பை மரங்கள் காணப்பட்டது ஆகவே இங்கு இழுப்பம் எண்ணெய் எடுக்கும் ஒரு தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது

மேலும் இங்கிருந்து ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் சென்றால் மடுக்கரைக்கு அருகாமையில் 2021 ஆம் ஆண்டளவில் பழங்கால களரி, கத்தி, போன்ற  கூர்மையான ஆயுதங்கள் காணப்பட்டதோடு இரும்பு உருக்கி எடுக்கும் கற்பாறை துண்டுகளும் காணப்பட்டது நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் மற்றும் பௌத்த துறவி சகிதம் வந்து பார்வையிட்ட பின் தொல்பொருள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது


குறித்த பொருட்களை பார்வையிட்ட அதிகாரிகள் இப்பகுதியில்  ஒரு இரும்பு உருக்கு தொழிற்சாலை ஒன்று அமைந்திருக்க கூடும் என்பதனை உறுதி செய்திருந்தார்கள்

இவை  அனைத்தும்  ஊடகங்களில் செய்தியாக வந்தாலும் யாரும் இதைப் பற்றி பெரிதாக பேசவும் இல்லை இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் இல்லை இவ்வாறான பொருட்கள் முறையான காபன் பரிசோதனை செய்யப்பட்டு அதற்குரிய காலத்தை நிர்ணயிக்க வேண்டுமே தவிர கிறிஸ்துவிற்கு பிற்பட்ட காலத்தோடு இணைப்பது பொருத்தமற்றது

இந்த கட்டுக்கரை குளமானது கி.பி.564-697 காலப்பகுதியில் முதலாம் அக்கபோதி மன்னனால் சீராக்கப்பட்டு விவசாய நடவடிக்கைக்காக விடப்பட்டதாக கதிர் தணிகாசலம் அவர்கள் எழுதிய தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும் எனும் நூலில் கூறப்பட்டள்ளது அதற்கு முன்பு சிறிய பகுதியில் விவசாயத்தை செய்து கொண்டு நல்லதொரு வியாபார நடவடிக்கையில் மன்னார் மக்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள்

என்றாலும் பல ஆயிரம் ஏக்கர் நிலம் தற்போதைய கால கட்டத்திலேயே விவசாய நிலமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்

மன்னாரில் துறை முகச் செயற்பாடுகள் இருந்த போது மக்கள் பெற்றுக் கொண்ட நண்மைகள் என்ன என்று பார்க்கும் போது

சகல நாடுகளிலும் இருந்து வியாபார நடவடிக்கைகளுக்காக வாடைக் காற்றின் துணை கொண்டு பாய்மரக்கப்பல் மூலம் இலங்கை வந்தால் அடுத்த வாடைக் காற்றின் துணையோடுதான் அவரவர் நாடுகளுக்குச் செல்ல முடியும்

அது வரை இங்கேயே தங்கி நின்று தொழில் பழகுவது கொண்டு வந்த பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள்


 அப்பொழுது  இங்கு உள்ள மக்கள் தங்களுக்குச் செந்தமான நிலங்களை வெளிநாட்டு வியாபாரிகளுக்கு குத்தகைக்கு வழங்குவது,உணவுகள் வழங்குவது கப்பல்களில் வரும் பொருட்களை ஏற்றி இறக்குவது, வெளிநாட்டு கப்பல் தாரிகளுக்கும், உள்ளுரில் வியாபாரம் செய்பவர்களுக்கான பாதைகளை காட்டுவது, பொருள், பண்டங்களைப் பாதுகாப்பது, வியாபாரத் தரகர்களை பிடித்துக் கொடுப்பது, போன்ற செயற்பாடுகளின் மூலம் ஒரு வருமானமும்

மன்னார் மாவட்டத்தில் ஏராளமான கடற் கொள்ளையர்கள் இருந்துள்ளார்கள் வெளிநாட்டவர்களின் பொருட்களை பாதுகாப்பதற்கு இங்குள்ள வீரர்களை காவல் படைகளாக ஏற்று ஊதியங்கள் வழங்கப்பட்டுள்ளது


மேலும் மன்னார் மக்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற,அல்லது சேமித்து வைக்கப்படுகின்ற வேட்டைப் பொருட்கள், முத்துக்கள், யானைத் தந்தங்கள், வாசனைத் திரவியங்கள், நெசவு உடைகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், எரு வகைகள்,கருவாடுகள், பலவிதமான பொருட்களை பண்டமாற்று மூலமாகவும், பணத்திற்கும் விற்பனை செய்வதால் இரண்டாவதாக ஒரு நண்மையையும் பெற்றுக் கொண்டார்கள்

இவ்வாறு துறைமுக செயற்பாடு காரணமாக பல வரப்பிரசாதங்களைப் பெற்று சீரும் சிப்புமாக இருந்த  மன்னார் மாவட்டத்தில் துறைமுக செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் எதுவாக இருக்கும்  என்று சிந்திப்போமானால்

ஒன்று இயற்கை மற்றொன்று அரசியல் இது யதர்த்த பூர்வமான உண்மைமுன்னைய காலத்தில் மன்னர் மாவட்டமானது தொடர்ச்சியான இயற்கை சீற்றங்களால் அடிக்கடி அழிவுகள் ஏற்படும் பூமியாக இருந்துள்ளது.  இவை குமரிக் கண்டமாக இருந்த போதும் அதன் பின்னரும் பாரிய நிலப்பரப்புகளை கடல் உள்வாங்கிக் கொண்டது மன்னார் தீவின் நிலப்பரப்பினை பார்த்தால்  முழுவதும் நீரினால் மூழ்கி பின்பு வற்றிய ஒரு தோற்றத்தைக் காணக் கூடியதாக இருக்கும்

இறுதியாக வரலாற்று தகவலின்  1445 ஆம் ஆண்டளவில் திருக்கேதீச்சரத்தின்  ஒரு பகுதியை கடல் கொண்டு சென்றதாக யாழ்ப்பாணம் ஆராலி  விஸ்வநாதர் சம்பவத்திரட்டில்  குறிப்பிடப்பட்டுள்ளது

இப்போது இருக்கும் தீவுக்குள்ளான கிராமங்கள் மற்றும் மண் அமைப்புகளை நோக்கும்போது நிச்சயமாக கடலினுள் சம்பூர்ணமாக உள்வாங்கப்பட்டு பின்பு கடல் வற்றியபின் மேல் எழுந்திருப்பது தெரியவரும்

கச்சதீவைப் போல் மனிதர்கள் மனிதர்கள் வாழாத தீவாக இருந்து இலங்கையின் மன்னார் தீவு தவிர்ந்த பெருநிலப்பரப்பாக உள்ள இடங்களும் நீர் கொழும்பு புத்தளம் மற்றும் பல இடங்களிலும் இருந்து தொழிலுக்காக வந்து குடியேறியவர்கள் என்றும் ஒரு செவி வழிக் கதைகள் உண்டு

நானாட்டான் பிரதேசத்தின் வங்காலைப் பகுதி  மற்றும் திருக்கேதீச்சரத்தின் ஊடாக யாழ் செல்லும் அந்த கரையோர இடங்கள் மக்கள் வசிப்பதற்கு தகுதியற்ற உவர் நிலமாக பாரிய நிலப்பகுதிகள் காட்சியளிக்கிறது இவை கடற் கோல் சீற்றத்தால் அழிவுற்று மக்கள் வசிப்பதற்கு தகுதியில்லாத இடங்களாக மாறியதனால் இந்த பிரதேசங்களில் வாழ்ந்தமக்கள் அழிந்தவர்கள் போக எஞ்சியவர்கள்  உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ குறிப்பாக தமிழ் நாட்டிற்கோ இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம்

இவ்வாறு கடற்கோள் இயற்கைப் பேரழிவினால் துறைமுக செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றாலும் இன்னுமொரு முக்கிய காரணம் அப்போதைய அரசியல்

சிங்களவருக்கும் தமிழருக்குமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனக்கலவரத்தால் தனித்தனி ராஜ்யங்கள் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்களை ஒல்லாந்தர் போர்த்துகீசியர் பிரிட்டிஷாரின் காலணித்துவத்தால் இரண்டு இனங்களையும் ஒன்றாக்கி நிர்வாகத்தை நடாத்தி வந்த அங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கி செல்லும் போது அதிகாரத்தை சிங்களவர்களின் கையில் வழங்கிச் சென்றார்கள்

வர்த்தகம், வாணிபம், மட்டுமல்ல அனைத்துத் வெளிநாட்டு தொடர்புகளும் துறைமுகம் கப்பல் போக்குவரத்தின் வாயிலாக தமிழர் பிரதேசங்களில் இருப்பதால் அது சிங்ஙகள மக்களுக்கும், சிங்கள அரசுக்கும், ஆபத்தான விளைவுகளை உண்டு பண்ணும் என்று நினைத்த சிங்களத் தலைமைகள் மன்னார் உட்பட தமிழர்பிரதேசங்களில் அமைந்திருக்கும் துறைமுக செயற்பாடுகளை நிறுத்ததித் தென்னிலங்கையை வலுப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

இதனால் துறைமுகத்தை மாத்திரம் நம்பி இருந்த மன்னார் மாவட்டம் துறைமுகம் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் பின்னர் தனது சுயத்தை இழந்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது


மன்னர் மாவட்டம் முன்னைய காலத்தில் இருந்தது போல் எழுச்சியுடனும் உயர்ச்சிவுடனும் காணப்பட வேண்டுமானால் மன்னாரில் வலுவான துறைமுகம் ஒன்று அமைவேண்டும் என்பதோடு இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்குமான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் பலரது விருப்பமாக உள்ளது

தங்களது உற்பத்திப் பொருட்களை தமிழ் நாட்டில் விற்பதோடு  தமிழ் நாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வந்து தங்களது தேவைக்குப் பயன் படுத்தி  தங்களது உற்பத்திப் பொருட்களுக்கான மூலப் பொருட்களை மிகவும் குறைந்த விலையில் தமிழ் நாட்டில் பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும்

அது மட்டுமல்லாது  இலங்கையில் சிறு கைத் தொழில்  தயாரிப்பதற்கு தமிழ்நாட்டு தமிழர்களிடம் நல்ல வரவேற்பு  இருக்கிறது

மன்னர் மாவட்டத்திற்கான  பேசாலை துறைமுகம் அந்த ஊர் மக்களால் நிறுத்தப்பட்டிருந்தாலும்  தற்போது கேள்விப்படுகின்ற ஏனைய  பிரதேசங்களைச் சார்ந்த உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் கல்வியாளர்களும் தற்போது அதை நினைத்து வருத்தமடைந்திருக்கின்றார்கள்

பண்டைய காலத்தில் இலங்கை நாட்டினை பெருமைப்படுத்திய மன்னார் மாவட்டம் மீண்டும் அதனுடைய எழுச்சி நிலையை அடைய வேண்டுமானால் முதல் கட்டமாக தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரத்திற்கான தொடர்ச்சியான கப்பல் சேவையை ஒன்றை ஆரம்ம்பிப்பதற்கு உரிய அதிகாரிகளும் இலங்கை அரசும் இந்திய துணைத்தூதரகமும் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

தரலமன்னார் ராமேஸ்வரம் கப்பல் சேவையால் மன்னார் மாவட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மக்களும் நல்ல பலனை அடைவர்கள்

இந்தியா-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் 24.02.1914 அன்று தொடங்கப்பட்டது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரே டிக்கெட்டில் வியாபாரிகள் பல்வேறு வகையான பண்டங்களையும், சரக்குகளையும் தனுஷ்கோடி ரயில் நிலையத்திற்குக் கொண்டு சென்று பிறகு அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னார் சென்று தலைமன்னாரில் இருந்து மீண்டும் ரயிலில் கொழும்பு வரையிலும் கொண்டு சென்றனர். அங்கு தங்களது பொருட்களை வியாபாரம் செய்து விட்டு கொழும்பிலிருந்து எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தமிழகத்திற்கு வாங்கி வந்தனர். இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பொருளாதார மற்றும் வியாபார வளர்ச்சி வளர்ந்தது.

1964-ம் ஆண்டு துறைமுக நகரமான தனுஷ்கோடி புயலில் அழிந்த பிறகு 1965-ம் ஆண்டிலிருந்து ராமேசுவரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கும் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.


அதற்கு ‘ராமானுஜம்’ என்ற பெயரிடப்பட்ட இந்தப் பயணிகள் கப்பலில் அதிகபட்சமாக 400 பேர் வரையிலும் பயணம் செய்யலாம். இதில் முதல் வகுப்புக் கட்டணம் ரூ.123, சாதாரணக் கட்டணம் ரூ.60 ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாரத்திற்கு மூன்று நாட்கள் ‘ஹவுஸ்ஃபுல்’லாகவே ராமானுஜம் கப்பல் தலைமன்னாருக்குச் சென்று வந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை யுத்தமாக மாறியதால் பாதுகாப்புக் காரணங்களாலும் கப்பல் போக்குவரத்து 1983-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதனால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் வணிக ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தோடு வறட்சியான மாவட்டங்கள் எனவும் பெயர் எடுத்தன.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 13.06.2011 அன்று தூத்துக்குடி-கொழும்பு இடையிலான ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற 9 அடுக்கு கொண்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு இரு நாட்டுப் பயணிகளால் அதிக வரவேற்பையும் பெற்றது. 1200 பயணிகள் வரையிலும் பயணிக்கக்கூடிய இந்தக் கப்பல் வாரத்தில் இரு நாட்கள் சேவையில் ஈடுபட்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் எதிர்ப்பைத் தொடர்ந்து 18.11.2011 அன்று கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இவ்வாறு தலைமன்னார் ராமேஸ்வரத்துக்கான கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களும் மன்னாரைப் போன்று பொருளாதாரத்தில் பின் தங்கிய வறட்சி நிலையை அடைந்துள்ளது தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்குமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்ட்டால் மன்னார் மாவட்டத்தைப் போலவே தமிழக தென் மாவட்ட மக்களும் பொருளாதார பரீதியில் வளர்ச்சி காண்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

முதல் கட்டமாக தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கப்பல் சேவை ஆரம்பித்தாலும் எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்திற்கு என்று பலமான துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் கல்வியாலர்களின் பெருவிருப்பமாக இருக்கிறது

No comments