மறைந்த முன்னாள் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாழ்வில் மறுக்கவும், மறக்கவும், முடியாதவர் சாதி, மதம், பாராமல் அனைவருக்கும் பேருதவி புரிந்தவர்.
யுத்த காலத்தில் பல இளைஞர், யுவதிகளின், உயிர்கள் பாதுகாக்கப்பட்டதற்கு ஆயரும் ஒரு காரணம்
மக்களுக்காக அரசை எதிர்த்து துணிச்சலாக அவரது கருத்துக்களை பதிவு செய்தவர் கடந்த 2021ம் ஆண்டு இதே தினத்தில் அவர் இறைவனடி சேர்ந்திருந்தார் இன்று அவரது நினைவு நாள் என்பதால் ஒரு ஊடகவியாளரால் இந்த அனுபவம் சாட்சியாக பதிவு செய்யப்படுகிறதுநான் இதை எங்கும் வெளிப்படுத்த விரும்பியதில்லை ஆயர் அவர்களும் இதை விரும்பியதில்லை
ஆயர் அவர்கள் மனிதநேயத்தோடு உதவிகளை மட்டுமே செய்வதை கண்ணாக கருத்தாக கொண்டவரே தவிர செய்த உதவிக்கான பெயரையும் புகழையும் அவர் எப்பொழுதுமே விரும்பி இருந்ததில்லை
இந்த நேரத்தில் திருத்தந்தை அவர்கள் செய்த உதவியை இந்த உலகம் முழுவதும் அறிந்து கொள்ளும்படி சொல்லுவதுதான் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று நான் இதை இங்கு பதிவு செய்கின்றேன்
கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் நல்லிரவு ஆராதனையில் சுட்டுக் கொள்ளப்பட்டார் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து கண்டனங்கள் பதிவாகிக் கொண்டிருந்தது
இந்த விடயம் தொடர்பாகவும் மேலும் பல மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆயர் அவர்களை தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் செய்வதற்காக சென்ற வேளை மன்னாரில் படையினரால் கைது செய்யப்பட்டேன் ரி.ஐ.டி நான்காம் மாடி ஆறு மாத கால விசாரணையின்,புதிய மெகஸின், களுத்துறை, சி.ஆர்.பி.வெலிக்கடை பூசா உட்பட கிட்டத்தட்ட இலங்கையில் உள்ள அத்தனை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருந்த பொழுது திருத் தந்தை என்னுடைய விடுதலைக்காக எவ்வளவோ போராடியவர்
இறுதியாக புதிய மகசின் சிறைச்சாலைக்கு என்னை கொண்டு வந்தவுடன்
தற்போது அமெரிக்காவின் வீர பெண்மணி என்ற விடுதலை பெற்ற சட்டத்தரணி ரணித்தா ஞான ராஜா அவர்கள் அப்பொழுதுதான் சட்டப் படிப்பை நிறைவு செய்திருந்தார் ஆயர் அவர்களின் பணிப்பின் பேரில் என்னுடைய வழக்கை சட்டத்தரணியான ரனித்தா ஞான ராஜா அவர்கள்கை கையில் எடுத்திருந்தார் என்னுடைய பயங்கரவாத தடைச்சட்டம் வழக்குதான் சட்டத்தரணி ரணித்தா அவர்களுக்கும் முதலாவது வழக்கு
அதன்பின் ஆயர் அவர்கள் புதிய மகசின் சிறைச்சாலைக்கு வந்து என்னைப் பார்வையிட்டு ஆறுதல் கூறி எனக்கான விடுதலையை துரிதமாக பெற்றுத் தருவதாக வாக்களித்திருந்தார்
எனக்கு 2008 இறுதியில் கொழும்பு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருந்தது ஆனால் நான் மன்னார் வர இயலாது அந்த நேரம் அது ஒரு பயங்கரமான சூழ்நிலையாக இருந்தது ரி.ஐ.டி.யில் ஒவ்வொரு வாரமும் கையெழுத்து வைக்க வேண்டும் என்ன செய்வது என்று நின்ற பொழுது செல்வம் அண்ணா மற்றும் வினோ அண்ணா இருவரும் (வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள்)தங்களுடைய பாராளுமன்ற விடுதியில் என்னை பாதுகாத்து வைத்திருந்தார்கள்
நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால் மன்னார் மாவட்டத்தை பார்க்க வேண்டும் என்று கூறியதும் எம்.பி செல்வம் அண்ணா மன்னாருக்கு என்னை அழைத்து வந்திருந்தார்
எனது ஊருக்கு வந்ததும் ஒரு நாள் திருத்தந்தைக்கு தொடர்பு எடுத்து சுவாமி உங்களை நான் நேரில் சந்தித்து நன்றி கூற வேண்டும் சுவாமி என்றேன்
செல்வம் அண்ணன்(எம்.பி) உடன் கொழும்பில் தங்கியிருப்பு சுவாமிக்குத் தெரியும் உடனடியாக சற்று கடுந்தொனியில் எப்ப வந்தாய்? ஏன் வந்தாய்? யாரோடு வந்தாய்? என்று கேட்டார்
அப்போது மனிதர்கள் மீது அவர் வைத்திருக்கும் அந்த அக்கறையையும் பாசத்தையும் உணர்ந்தேன் நான் தயங்கியபடியே சுவாமி ‘செல்வம் அண்ணனோட தான் வந்தேன் ஆனால் நான் தான் அவரை வற்புறுத்தி வந்தேன்’ என்று கூறவும் அதற்கு சுவாமி ‘இப்ப எல்லாம் வர இயலாது பாதுகாப்பு பிரச்சினை இன்னும் ஒரு நாளைக்கு சந்திக்கலாம்’ முதலில் செல்வத்தோடு கொழும்புக்குப் போ’ என்றார்
இல்ல சுவாமி இவ்வளவு தூரம் உங்கள பாக்குறதுக்கு தான் சுவாமி வந்தேன் என்று நீண்ட நேரம் விவாதமும் கெஞ்சலுக்கு பிறகு ‘இப்ப எங்க நிற்கின்றா’ என்று கேட்டார்
நான் இடத்தைக் கூறினேன் சுவாமி ‘அங்கேயே நில் என்றார்’ சிறிது நேரத்தின் பின் நான் நிற்கும் இடத்திற்கு சுவாமி சுவாமியின் வாகனம் வந்தது அதில் சுவாமி இருந்தார் உடனடியாக என்னை அழைத்த தலையில் கையை வைத்து எனக்கு ஆசியையும் தந்துவிட்டு மன்னாரில் வாழ்வுதயம் இருக்கு இன்னும் சில இடங்களில் நீ விரும்பினால் வேலை செய்யலாம் என்றார் இப்போதைக்கு ஊடகங்களுக்கு போகாத பிரச்சனை இருக்கு என்று அறிவுரைகளையும் ஆசிகளையும் கூறிச் சென்றார்
இப்படி எல்லோரும் வணங்கக் கூடிய ஒரு தெய்வம் நான் இருக்கும் இடம் தேடி வந்து ஆசி வழங்கிய அந்த நற்பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்து இருக்குமோ எனக்கு தெரியாது
நான் ஒரு மாற்று மதத்தை சார்ந்தவன் என்று தெரிந்தும் இப்படி ஒரு மனித நேயத்தை மனிதநேய கடவுளை நான் நேரில் பார்த்திருக்கின்றேன் உண்மையில் எனக்கு பல மேடைகளில் இதை இந்த விடயங்களை கூற வேண்டுமென்று நான் விரும்பி இருந்தாலும் எனக்கான சந்தர்ப்பம் அமையவில்லை திருத்தந்தையும் அதனை விரும்ப மாட்டார் இந்த நேரத்திலாவது திருத்தந்தை அவர்கள் எனக்கு செய்த உதவியை கூறியாக வேண்டும்
யுத்தகாலத்தில் மதம் கடந்து மனிதத்தை நேசித்த ஒரு மகான் எங்களுடைய முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நல்லதொரு தலைமை எங்களுடைய ஆயர் தந்தையின் ஆத்மா சாந்தியடைய எல்லாருக்கும் பொதுவான அந்த இறைவனை வேண்டி நிற்கின்றேன்
நன்றியுடன்
நான்
ஊடகவியலாளன் மன்னார்